Published : 02 Jan 2017 02:59 PM
Last Updated : 02 Jan 2017 02:59 PM
துருக்கியில் புத்தாண்டு தினத்தன்று கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது.
இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஐஎஸ் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில்,"புனித போரின் தொடர்ச்சியாக துருக்கிக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துருக்கியின் பிரபலமான கேளிக்கை விடுதியில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த கிறிஸ்துவர்களைத் தாக்கியது எங்களது படைவீரர்தான்" என்று கூறப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தில் நடந்த கொடூரத் தாக்குதல்
முன்னதாக இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ரீனா இரவு விடுதியில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர், விடுதியின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு காவலர் உட்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டார்.
பின்னர் விடுதிக்குள் நுழைந்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனால் விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு இங்கும் அங்குமாக ஓடினர். இதனிடையே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 39 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக யாரும் பொறுப்பேற்காத நிலையில் இந்தத் தாக்குதலை ஐஎஸ் இயக்கம் நிகழ்த்தியிருக்கலாம் என துருக்கி அரசு சந்தேகம் தெரிவித்திருந்தது. இதனிடையே இன்று (திங்கட்கிழமை) இந்தத் தாக்குதலை தாங்கள்தான் நடத்தினோம் என்று ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
துருக்கி மீதான ஐஎஸ்ஸின் விரோத பின்னணி
2016-ஆம் ஆண்டு முதல் சிரியா மற்றும் இராக்கில் பரவியுள்ள ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதில் துருக்கி ஆர்வம் காட்டி வந்தது. அதனையடுத்து ஐஎஸ் இயக்கம் துருக்கிக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.
கடந்த டிசம்பர் மாதம் ஐஎஸ் அமைப்பால் துருக்கியின் இரு ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு துருக்கி பிரதமர் பினலி இல்திரிம், "ஐஎஸ் அமைப்புக்கு தக்க பதிலடி அளிக்கப்படும். தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல் துருக்கியிலும், அதன் எல்லைப் பகுதிகளிலும் தொடரும். தீவிரவாதத்தை இறுதியில் நமது ஒற்றுமை வெல்லும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் துருக்கி மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT