Published : 30 Nov 2013 10:19 AM
Last Updated : 30 Nov 2013 10:19 AM

2010 ஜி-20 மாநாட்டை உளவு பார்த்தது அமெரிக்கா : கனடா ஊடகம் தகவல்

கனடாவின் டொரான்டோ நகரில் 2010-ம் ஆண்டில் நடைபெற்ற ஜி-20 மாநாடு முழுவதையும் அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.) உளவு பார்த்துள்ளது.

இதற்கு கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான அரசும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

என்.எஸ்.ஏ. முன்னாள் ஊழியர் ஸ்னோடென்னை மேற்கோள் காட்டி கனடா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (சி.பி.எஸ்.) ஊடகம் இந்த பரபரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது. கனடாவின் டொரான்டோ நகரில் 2010-ம் ஆண்டு ஜூன் 26, 27-ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அவர்களின் தொலைபேசி உரையாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டுக் கேட்டுள்ளது. இதற்கு கனடா அரசின் உளவு அமைப்பான கனடா தொலைத்தொடர்பு பாதுகாப்பு நிறுவனமும் (சிஎஸ்இசி) முழுஒத்துழைப்பு அளித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உளவுத் தகவல்களைச் சேகரித்து வருகின்றன. ஐந்து கண்களின் உளவு என்ற பெயரில் அந்த நாடுகள் ஓரணியில் செயல்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் என்.எஸ்.ஏ. அமைப்புக்கு கனடா உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2008-ல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சிக்கித் தவித்தன. இந்நிலையில் 2010 டொரான்டோ ஜி 20 மாநாட்டில் பொருளாதார நெருக்கடி குறித்து அதிகமாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, வங்கிகளுக்கு சர்வதேச அளவில் வரி விதிப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கு அமெரிக்காவும் கனடாவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதுபோன்ற கொள்கை விவகாரங்களில் அமெரிக்காவுக்கு சாதகமான நிலையை அறியவே ஜி20 மாநாட்டில் உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கனடா ஊடகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா பிரதமர் அலுவலகத்தில் விசாரித்தபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

ஜி-8 மாநாட்டிலும் உளவு

கனடாவின் ஹன்ட்வில்லே நகரில் 2010-ம் ஆண்டு ஜூன் 25, 26-ம் தேதிகளில் ஜி-8 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டையும் என்.எஸ்.ஏ. அமைப்பு உளவு பார்த்துள்ளது.

ஏற்கனவே இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் என்.எஸ்.ஏ. உளவுப் பணிகளில் ஈடுபட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. குறிப்பாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போன் உரையாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டுக் கேட்டதை ஐரோப்பிய நாடுகள் கடுமையாகக் கண்டித்தன.

இப்போது ஜி-20, ஜி-8 மாநாடுகளில் பங்கேற்ற உலகத் தலைவர்களையும் என்.எஸ்.ஏ. உளவு பார்த்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடிக்கும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x