Published : 27 Feb 2014 11:18 AM
Last Updated : 27 Feb 2014 11:18 AM

வேலையை உருவாக்கும் அடுத்த கண்டுபிடிப்பு அமெரிக்காவில் இருக்க வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல்

பெரிய அளவில் வேலைகளை உருவாக்கும் அடுத்த கண்டுபிடிப்பு அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் அதிபர் பராக் ஒபாமா.

வெள்ளை மாளிகையில் செவ்வாய்க் கிழமை உற்பத்தியில் புதுமை தொழில்நுட்ப நிறுவனங்களை அறிமுகம் செய்துவைத்து அவர் பேசியதாவது:

பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கண்டுபிடிப்புகள் இனி ஜெர்மனியிலோ சீனாவிலோ அல்லது ஜப்பானிலோ இருக்கக்கூடாது. அது அமெரிக்காவில்தான் இருக்க வேண்டும். மிச்சிகனில் அமையும் மையம், மேம்படுத்திய லேசான எடை பொருள்களை உற்பத்தி செய்வதில் முக்கியத்துவம் தரும்.

சிகாகோவில் அமையும் மையம் டிஜிட்டல் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு புதுமை தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும். சிகாகோவில் அமைவது 40 நிறுவனங்கள் 23 பல்கலைகள், ஆய்வுக் கூடங்கள், 200 சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பாக இருக்கும். இந்த கூட்டமைப்பில் வேறு மாநிலங்களும் பங்கேற்கும்.

பாதுகாப்புத் துறை தலைமையில் 7 கோடி டாலர் நிதியில் இது அமைக்கப்படும். எனினும் அரசும் வர்த்தக நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் 25 கோடி டாலர் நிதியை திரட்டி இந்த முயற்சியில் இறங்கியுள்ளன.

உற்பத்தி நடைபெறும் இடங்களில் ஆய்வும் மேம்பாடும் கூடவே இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றை நாம் வடிவமைத்தால் எப்படி வேலை செய்கிறது என்பதையும் அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அதில் மாற்றம் கொண்டு வந்து இன்னும் புதுமையானதாக மாற்றி அமைக்க முயற்சிக்கிறோம்.

உற்பத்தி வேறு எங்கோ இருந்தால் வடிவமைப்பு, ஆராய்ச்சி, மேம்பாட்டில் நாம் முன்னிலை வகிக்கும் நிலைமை பறிபோய்விடும்.

குறைந்த விலையில் விறு விறுவென விற்கக்கூடிய புதிய பொருள்களை தயாரிக்கும் நாடு எதிர்காலத்தில் நிறைய வேலைகளை உருவாக்குவதில் பிற நாடுகளை வெல்கிறது. அமெரிக்காவில் அமையும் இந்த புதிய உற்பத்தி மையங்கள் பொருள் தயாரிப்பை மாற்றி அமைக்கப்போகின்றன. காகிதத்தை விட மெல்லியதான ஆனால் இரும்பு தகடை விட வலிமையான தகடை உருவாக்க முடியுமா என கற்பனை செய்யுங்கள். அதை நமது ஊழியர்கள் இன்னும் 20 ஆண்டுகளில் தயாரிக்கத்தான் போகிறார்கள். அமெரிக்காவில் 4 உற்பத்தி மையங்கள் தான் உள்ளன. ஆனால் ஜெர்மனியிலோ 60 மையங்கள் இருக்கின்றன.

ஜெர்மனி இந்த மையங்களில் பெருமளவு முதலீடு செய்துள்ளதால்தான் உற்பத்தியில் அந்நாடு முன்னிலை வகிக்கிறது. மேலும் குறிப்பிட்ட கருவிகளை தயாரிப்பதற்காக ஊழியர் களுக்கு சிறப்பு பயிற்சியும் தருகிறது. அந்த வலுவில்தான் நமக்கு உரிய சந்தையிலும் அதனால் நுழைய முடிகிறது என்றார் ஒபாமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x