Published : 21 Jan 2014 10:25 AM
Last Updated : 21 Jan 2014 10:25 AM
சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஈரானுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு அமெரிக்கா மற்றும் சிரியா எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. சிரியா எதிர்க்கட்சி பேச்சு வார்த்தையைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது. சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஜெனீவாவில் வரும் புதன்கிழமை அமைதிப் பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானுக்கு ஐ.நா. அழைப்பு விடுத்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக அறிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி- மூன், “இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் நேர்மறையான மற்றும் உறுதியான பங்களிப்புக்காக ஈரானுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாரிஃப், தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் உறுதியான பங்களிப்பைச் செலுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்
இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிரியா அதிபர் பசார் அல் அஸாத்துக்கு ஈரான் ஆதரவாக இருக்கிறது. எனவே, அதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை பான் கி- மூன் திரும்பப் பெற வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சிரியன் தேசிய கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் அகமது ரமதான் கூறுகையில், “ஈரான், சிரியாவை ஆக்கிரமிக்கிறது. ஆகவே, இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது” என்றார்.
சிரியன் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் லுவாய் சஃபி, “ஈரானுக்கான அழைப்பை ஐ.நா. திரும்பப் பெறாவிட்டால், சிரியா எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கும்” என்று ட்விட்டர் சமூக இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறுகையில், “வரும் ஜெனீவா மாநாட்டில், சிரியாவில் இடைக்கால அரசு அமைப்பதற்கு உறுதியான மற்றும் வெளிப்படையான ஆதரவு அளிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடனே ஈரானுக்கு ஐ.நா. அழைப்பு விடுத்திருப்பதாக அமெரிக்கா கருதுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு, அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சிரியாவில் இடைக்கால அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டபோது, இத்திட்டத்திற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது. அமைதிப் பேச்சுவார்த்தையின் தொடக்க நாளில் 30 நாடுகள் பங்கேற்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT