Published : 18 Nov 2013 07:36 AM Last Updated : 18 Nov 2013 07:36 AM
இலங்கைக்கு யாரும் ஆணையிட முடியாது!- ராஜபக்சே ஆவேசம்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போதுராணு வத் தரப்பில் இழைத்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப் படவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் நிராகரித்தார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே. இலங்கைக்கு பிற நாடுகள் ஆணையிட முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
3 நாளாக கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு நிறைவடைந்ததையொட்டி நிருபர்களுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்தார்.
போர்க்குற்றம், மனித உரிமை மீறல் புகார் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு மார்ச் மாதத்துக் குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழர்கள் கண்ணியமாகவும் மரியாதை யுடனும் வாழ வழி செய்யும்படியும் இலங்கை அரசை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ராஜபக்சே கூறியதாவது:
தமிழர்களின் குறைகளுக்கு தீர்வு கண்டு நல்லிணக்கம் ஏற்படுத்த இலங்கைக்கு கால அவகாசம் தேவை. அதற்கு கால நிர்ணயம் குறிக்க முடியாது. இலங்கைக்கு என அரசமைப்புச் சட்டமும், சட்ட நடைமுறைகளும் இருக்கின்றன. குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நடைமுறை தொடங்கி விட்டது.
வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களின் மனநிலையை மட்டும் அல்லாமல் தெற்கில் உள்ள வர்களின் மனநிலையையும் மாற்ற வேண்டும். 30 ஆண்டு கால இனப்போரில் தமிழர்கள் மட்டுமே பாதிப்புக்குள் ளாகவில்லை. சிங்களர்களும் முஸ்லிம்களும் கூட பாதிப்புக்குள் ளானார்கள். அவர்களது மன வேதனைகளுக்கும் ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு வாரத்திலோ அல்லது 3, 4 மாதத்திலோ விசாரணைக்கு ஆணையிடச் சொல்வது நியாயம் ஆகாது. போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறல் தொடர்பாக மார்ச் மாதத்துக்குள் சுதந்திர மான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என (பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்) விதித்த கெடுவை இலங்கை சம்மதிக்காது.
எங்களிடமும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள், யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது. எங்கள் தரப்பு உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள், சமூகங்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். நாடாளுமன்ற குழு அமைத்துள்ளோம் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற குழுவை அமைத்துள்ளோம். அதற்கு கால அவகாசம் கொடுங்கள்.
காமன்வெல்த் அமைப்பின் நெறிகளுக்கும் மனித உரிமை களுக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் மரியாதை தருகிறோம். அதனால்தான் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்தது. நாடாளுமன்றம் உள்ளது. தெரிவுக்குழுவை அமைத்துள் ளோம். பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என கேட்டு யோசனைகள் சொல்லும்படி பொதுமக்களை அணுகி இருக்கிறோம். இவற்றை ஒரு ஆளாக நான் மட்டும் செய்துவிட முடியாது என்றார் ராஜபக்சே.
போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு மார்ச்சுக்குள் இலங்கை உத்தரவிடவேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் வெள்ளிக்கிழமை கெடு விதித்தார். தவறினால் சர்வதேச விசாரணை கோருவேன் என்றும் எச்சரித்தார். அவரது கோரிக்கையை இலங்கை உடனடியாக நிராகரித்தது. நெருக்குதலுக்கு பணிந்து விசாரணைக்கு உத்தரவிட மாட்டோம். சர்வதேச விசாரணை யையும் அனுமதிக்க மாட்டோம் என்று கைவிரித்தது.
காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த கேமரூன், இறுதிக்கட்ட போரின்போது சின்னாபின்ன மடைந்த யாழ்ப்பாணத்துக்கு சென்று நிலைமையை நேரில் கண்டறிந்தார். பொதுமக்களின் குறைகளையும் கேட்டார். அதிபர் ராஜபக்சேயை வெள்ளிக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார் டேவிட் கேமரூன்.
மால்டாவில் அடுத்த காமன்வெல்த் மாநாடு
அடுத்த காமன்வெல்த் மாநாடு, தெற்கு ஐரோப்பிய நாடான மால்டாவில் 2015ம் ஆண்டில் நடைபெறுகிறது.
கொழும்பில் நடைபெற்ற 3 நாள் காமன்வெல்த் உச்சிமாநாட்டின். நிறைவு நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை இதை அறிவித்தார் அதன் தலைமைச்செயலர் கமலேஷ் சர்மா.
2015ம் ஆண்டு மாநாட்டை மால்டாவில் நடத்தும்படி அதன் பிரதமர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று மால்டாவில் இந்த மாநாட்டை நடத்துவது என காமன்வெல்த் தலைவர்கள் ஒருமனதாக முடிவு எடுத்தனர் என்றார் சர்மா.
இதனிடையே, அடுத்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மால்டா மேற்கொள்ளும் என அதன் பிரதமர் ஜோசப் மஸ்கட் கூறினார்.
WRITE A COMMENT