Published : 05 Oct 2013 08:36 AM Last Updated : 05 Oct 2013 08:36 AM
அரசு நிதிச்சுமை எதிரொலி: திருமணங்கள் நிறுத்தம் - அமெரிக்கர்கள் வருத்தம்
அமெரிக்காவில் அரசு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் 8 லட்சம் பேர் சம்பளமின்றி வீட்டில் முடங்கியுள்ளனர். அரசு அருங்காட்சியகங்கள், நினைவிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ள ஏராளமானவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அப்பகுதிகளை அரசு மூடியுள்ளதால் அங்கு நடைபெறவிருந்த திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பெரும்பள்ளத்தாக்கு (கிராண்ட் கன்யான்), வாஷிங்டனில் உள்ள நினைவுச் சின்னங்கள் அருகே நவம்பர் முதல் வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறவிருந்தன. வேறு தேதி, இடங்களில் திருமணத்தை நடத்த வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாவும் இதர பொது நிகழ்வுகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளன.
அரசு வங்கிகளில் கடன் பெற்றவர்கள், தங்களுக்கு வரவேண்டிய காசோலைகளைப் பணமாக்க முயற்சித்தால், அவை கடன்களுக்காக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், கால்நடைகளை விற்றதற்கான பணத்தைப் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
செவ்விந்தியர்கள் தவிப்பு
அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்பு நிதி, நுண்ணூட்டச்சத்து திட்டங்கள், நிதியுதவித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் செவ்விந்தியர்கள் தவித்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கும் பாதிப்பு பாலர்பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவுத் திட்டம், மருத்துவத் திட்டம் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளதால், நான்கு மாகாணங்களைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழைக்குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் உள்ள அமெரிக்க போர் வீரர்களின் நினைவிடங்கள் மூடப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஜ் மற்றும் தென் கிழக்கு பிரிட்டனில் உள்ள வோகிங் ஆகிய 2 இடங்களில் போர்வீரர் கல்லறைகள் அமெரிக்காவின் போர் நினைவிட ஆணையத்தால் பராமரிக்கப்படுகின்றன. நிதிப்பற்றாக்குறை காரணமாக இரு கல்லறைத் தோட்டங்களும் மூடப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறைக்கால நாள்களுக்கு ஊதியம் வழங்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் முன்தேதியிட்டு கட்டாய விடுமுறை நாள்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
WRITE A COMMENT