Published : 21 Feb 2017 02:28 PM
Last Updated : 21 Feb 2017 02:28 PM
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் திருத்தப்பட்ட குடியேற்ற கொள்கை மீண்டும் அதே 7 முஸ்லிம் நாடுகளை குறி வைக்கிறது எனவும், அதில் சிறிய திருத்தமாக ஏற்கெனவே விசா பெற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, "ட்ரம்பின் குடியேற்ற கொள்கைக்கு அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட்டது.
பரிசீலிக்கப்பட்ட குடியேற்ற கொள்கையின்படி, மீண்டும் அதே 7 நாடுகள் (இரான், ஈராக், ஏமன், சோமாலியா, லிபியா சூடான், மற்றும் சிரியா) குறிவைக்கப்படுகின்றன. இருப்பினும் கிரீன் கார்ட் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு ( தடை விதிக்கப்பட்ட ஏழு முஸ்லிம் நாடுகளும் அடக்கம்) இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மறுபரிசீலிக்கப்பட்ட குடியேற்ற கொள்கையின்படி, சிரியாவைச் சேர்ந்தவர்களுக்கு புதிதாக விண்ணப்பித்திருந்த விசா நிராகரிக்கப்படும்" என்று கூறினரர்.
மேலும் இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "மறுபரிசீலனை செய்யப்பட்ட குடியேற்ற கொள்கை விரைவில் வெளியிடப்படும்" என்றார்.
முன்னதாக இது தொடர்பாக வால் ஸ்ட்ரிட் ஜர்னல் பத்திரிகை, மறுபரிசீலிக்கப்பட்ட குடியேற்ற கொள்கை மீண்டும் அதே 7 முஸ்லீம் நாடுகளை குறிவைக்கிறது என்றும், இருப்பினும் அதில் சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிரியா, இராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அதிபர் ட்ரம்ப் கடந்த ஜனவரி 27-ம் தேதி உத்தரவிட்டார். இதனால் வாஷிங்டன், நியூயார்க் உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சுமார் 60 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
அதிபரின் உத்தரவை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. சியாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அதிபர் ட்ரம்பின் தடையை நீக்கி உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT