Published : 27 Feb 2014 11:06 AM
Last Updated : 27 Feb 2014 11:06 AM
அமெரிக்காவில் ஒரு தம்பதிக்குச் சொந்தமான நிலத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 1400 தங்கக் காசுகள் புதையலாகக் கிடைத்தன. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.62 கோடி) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு தம்பதி, தங்கள் நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மரத்தின் கீழே, மிகப் பழமையான சிதிலமடைந்த உலோகக் குவளைகளில் தங்கக் காசுகள் புதைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர்.
அதைத் தோண்டி எடுத்த போது 1,400 தங்கக் காசுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.62 கோடி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக நாணயவியல் வல்லுநர் டான் காகின் கூறியதாவது: அண்மையில் கிடைத்த தங்கப் புதையலில் இதுவே மிகப் பெரிய அளவாகும். இந்த தங்க நாணயங்களின் உண்மையான முக மதிப்பு 28 ஆயிரம் அமெரிக்க டாலர்களாகும் (சுமார் ரூ.17 லட்சம்). ஆனால், அந்த தங்கக் காசுகளில் சில அரிதான காசுகளும் உள்ளன. அவை ஒவ்வொன்று சுமார் ரூ.6.2 லட்சம் மதிப்புள்ளவை.
அவற்றை நாணய சேகரிப்பாளர்கள் விலைக்கு வாங்கத் தயராகவுள்ளனர். கிடைத்துள்ள நாணயங்களில் பெரும்பாலானவை, தற்போது அருங்காட்சியகத்திலும், பெரும் நாணய சேகரிப்பாளர்களிடமும் உள்ளனவற்றை விட மிக நல்ல வடிவமைப்புடன் கூடியவை. தங்கப் புதையல் கிடைத்த அத்தம்பதி தங்களின் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. பெரும்பாலான தங்கக்காசுகளை அவர்கள் விற்க முடிவு செய்துள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT