Published : 06 Dec 2013 03:16 PM
Last Updated : 06 Dec 2013 03:16 PM
'உண்மையான தலைவர்கள் தங்கள் மக்களுக்காக தங்களது அனைத்து சுதந்திரங்களையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.'
இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல; இந்த இலக்கணப்படியே வாழ்ந்து காட்டிய நெல்சன் மண்டேலா தான்!
தன் நாட்டு மக்கள் அனைவரும் சம வாய்ப்புகளோடு சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்பதற்காக மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரது சிறைவாசமே போராட்டமாகத் தொடர்ந்தது. மக்களுக்கான போராட்டம். உலகில் நிறவெறிக்கு இடமில்லை என உணர்த்திய போராட்டம். அகிம்சை ஆயுதத்தின் மூலம் ஆதிக்க வெறியை அமைதியாக சாய்க்கலாம் என உணர்த்திய போராட்டமாகவும் அது அமைந்தது.
1990-ம் ஆண்டு அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனபோது, அது மனிதகுலத்தின் விடுதலையாகக் கொண்டாடப்பட்டது. அவரது கைவிலங்குகள் அகன்றபோது தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர்கள் கைகளில் இருந்தும் இனப்பாகுபாடு எனும் விலங்கு அகன்றது.
1994-ம் ஆண்டு அவர் தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானபோது, நினைத்து பார்க்க முடியாத வரலாற்று சாதனையாகவும் அது அமைந்தது. முதல் முறை அதிபரான பிறகு இரண்டாம் முறை பதவிக்கு வராமல் இருந்தபோதும் மண்டேலா மீண்டும் ஒரு முறை முன்னுதாரணமாக மாறினார்.
எல்லா விதங்களிலும் மண்டேலாவின் வாழ்க்கையே முன்னுதாரணமானதுதான். இந்த மகத்தான மனிதரின் வாழ்க்கை 1918-ம் ஆண்டு துவங்கியது. தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு முனையில் உள்ள வேசோ (Mvezo) எனும் கிராமத்தில் மண்டேலா பிறந்தார்.
ஹோசா (Xhosa) மொழி பேசிய தெம்பு இனக்குழுவில் அவர் தந்தை குழுவின் தலைவருக்கு ஆலோசகராக இருந்தார். மண்டேலாவின் இயற்பெயர் ரோலிலாலா மண்டேலா (Xhosa). பின்னர் ஞானஸ்தனத்தின்போது ஆசிரியர் அவருக்கு நெல்சன் எனும் ஆங்கிலப் பெயர் வைத்தார்.
மண்டேலாவுக்கு 9 வயதானபோது அவரது தந்தை இறந்துவிட்டார். குழுவினத் தலைவர் அவரை தத்தெடுத்து வளர்த்தார். கிராமத்தில் இருந்து மாகாணத் தலைநகருக்கு குடிபெயர்ந்தவர், வெஸ்லியன் மிஷன் பள்ளியில் படித்தார். இங்கு ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர், தடகளம் மற்றும் குத்துச்சண்டையிலும் புலியாக இருந்தார்.
இதனிடையே, மண்டேலாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கவே, அதில் இருந்து தப்பிக்க அவர் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கிற்கு வந்துவிட்டார். அப்போது அவருக்கு 23 வயது.
இரண்டு ஆண்டுகள் கழித்து விட்ஸ்வாட்டரண்ட் பல்கலைக்கழக்கத்தில் சேர்ந்து சட்டம் பயின்றார். தலைநகர் வாசம் தான் அவருக்கு தனது நாட்டில் நிலவிய வெள்ளையர் ஆதிக்கத்தையும், நிறவெறியின் கொடூரத்தையும் உணர்த்தியது. இதன் பயனாக அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர் இக்கட்சியின் இளைஞர் பிரிவையும் நிறுவினார். 1944-ல் மண்டேலா எவ்லின் மாசே (Evelyn Mase) என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1944-ல் நடந்த இந்த திருமணம் 1958-ல் முறிந்துவிட்டது.
1952-ல் மண்டேலா ஆலிவர் டாம்போ எனும் நண்பருடன் சேர்ந்து வழக்குரைஞராக தொழில் துவங்கினார். இருவருமாக சேர்ந்து நிறவெறிக்கு எதிராகவும் போராடினர். வெள்ளையர்கள் மட்டுமே உறுப்பினராக இருந்த ஆளும் தேசிய கட்சிக்கு எதிராக அவர் உறுதியுடன் போராடினார்.
1956-ல் அவர் மீது தேசத் தூரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 155 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு நான்கு ஆண்டுகள் நடைபெற்று அவர் விடுவிக்கப்பட்டார்.
அப்போது அறிமுகம் செய்யப்பட்ட பாஸ் லாஸ் எனும் சட்டம் கறுப்பர்கள் எங்கே வசிக்கலாம்; எங்கே பணிபுரியலாம் என கட்டுப்பாடு விதித்து இனப் பாகுபாட்டை மேலும் மோசமாக்கியதால் போராட்டமும் தீவிரமானது. இதனிடையே 1958-ல் மண்டேலா வின்னியை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு போராட்டத்திலும் மண்டேலாவுடன் துணை நின்ற வின்னி அவரது நீண்ட சிறைவாசத்தின் போதும் அவரது விடுதலைக்காக குரல் கொடுத்தார்.
1960-ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டதால் மண்டேலா தலைமறைவாகி போராட்டத்தை தொடர்ந்தார். அதே ஆண்டு வெள்ளையர் அரசின் அடக்குமுறை உச்சத்தை தொட்டது. ஷார்பேபில்லே பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஜாலியன்வாலாபாக்காக அமைந்த இந்தப் படுகொலையால் வெகுண்ட மண்டேலா அகிம்சை முறையை கைவிட்டு பொருளாதார தடை போராட்டத்தை அறிவித்தார். அப்போது அவர் கட்சியின் துணைத்தலைவராக இருந்தார். தென்னாப்பிரிக்க அரசு அவரை தீவிரவாதி என முத்திரை குத்தி அரசை கவிழ்க்க சதி செய்த்தாகவும் குற்றம் சாட்டியது. அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு 1964-ம் ஆண்டு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரோபன் தீவுகளில் அவரது சிறைவாசம் ஆரம்பமானது. 18 ஆண்டுகள் அங்கு கொடிய சிறை வாசத்தை அனுபவித்த பிறகு 1982-ல் நாட்டின் பிரதான பகுதியில் இருந்த போல்ஸ்மூர் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறைவாசத்தின் ஆரம்ப காலத்தில் அவரது தாய் மற்றும் மூத்த மகன் இறந்து விட்டனர். ஆனால் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க மண்டேலா அனுமதிக்கப்படவில்லை. சிறையில் சுண்ணாம்புக் கல் உடைப்பது உட்பட கடினமான வேலைகளை செய்தார். எல்லா இன்னல்களையும் தனது மக்களுக்காக பொறுத்துக்கொண்டிருந்தார்.
இதனிடையே, தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் மண்டேலாவின் விடுதலை எனும் ஒற்றை குறிக்கோளுடன் தீவிரமானது. தன் மக்களின் உரிமை போராட்டத்துக்காக சிறைவாசம் அனுபவிக்கும் அந்தத் தலைவரை விடுதலை செய்ய வலியுறுத்தி உலகம் முழுவதும் ஆதரவு வலுத்தது. 1988-ம் ஆண்டு லண்டல் வெம்பிலி மைதானத்தில் 72,000 பேர் திரண்ட மாபெரும் இசை நிகழ்ச்சி மண்டேலா விடுதலைக்காக குரல் கொடுத்தது.
ஒரு மனிதரின் விடுதலைக்காக இந்த அளவுக்கு ஆதரவு உண்டானதில்லை என கூறும் அளவுக்கு மண்டேலாவுக்காக அகில உலகமும் குரல் கொடுத்தது. இதன் பயனாக 1990-ம் ஆண்டு மண்டேலா சிறையில் இருந்து விடுதலை செய்யபட்டார். தென் ஆப்பிரிக்கா நிறவெறியில் இருந்து விடுப்பட்டது.
1962-ம் ஆண்டு தனக்கு எதிரான வழக்கு விசாரணையில் தானே ஆஜராகி வாதாடிய மண்டேலா, 'எல்லா மக்களும் நல்லிணக்கத்தோடு சம வாய்ப்புகளோடு வாழும் சுதந்திரமான ஜனநாயக சமூகம் அமைய வேண்டும் என்பது என் லட்சியம். இந்த லட்சியம் நிறைவேறுவதை பார்க்க வாழ வேண்டும். தேவைப்பட்டால் இந்த லட்சியத்திற்காக உயிரையும் கொடுப்பேன்' என முழங்கினார்.
இதைச் செயலிலும் காட்டி தென் ஆப்பிரிக்க மக்களுக்கு நிற வெறியில் இருந்து விடுதலை வாங்கித் தந்து புது வாழ்வு மலரச்செய்தார்.
விடுதலைக்குப் பிறகு வெள்ளையர்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை மன்னிப்பை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது. இதுவே அந்நாட்டில் முதல் சுதந்திர தேர்தலுக்கு வழிவகுத்து அவரை மக்கள் அதிபாராக்கியது. 1994-ல் அவருக்கு அமைதிக்கான நோபல பரிசு வழங்கப்பட்டது.
பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பொதுவாழ்க்கையில் இருந்து பெரும்பாலும் விலகி வாழ்ந்து வந்த மண்டேலா நோயோடு போராடிக்கொண்டிருந்தார். இதுவும் சிறைவாசம் தந்த பரிசு தான். சிறையில் இருந்தபோது அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். நோயுடனான அவரது போராட்டம் முடிவுக்கு வந்து 95-வது வயதில் அவரது உயிர் பிரிந்தது.
தென் ஆப்பிரிக்கா அதன் மகத்தான புதல்வரை இழந்துவிட்டது என அவரது மரணச்செய்தியை அறிவித்த அந்நாட்டு அதிபர் ஜுமா குறிப்பிட்டார். தென் ஆப்பிரிக்கா மட்டுமா, ஒட்டு மொத்த உலகமும் அதன் மகத்தான புதல்வரை இழந்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT