Last Updated : 17 Nov, 2014 06:22 PM

 

Published : 17 Nov 2014 06:22 PM
Last Updated : 17 Nov 2014 06:22 PM

தாய்லாந்து: பாகனைக் கொன்றுவிட்டு 2 பேருடன் காட்டுக்குள் சென்ற யானை பிடிபட்டது

தாய்லாந்தில் தனது பாகனைக் கொன்றுவிட்டு, வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணியையும் அவரது மகளையும் முதுகில் சுமந்தபடி காட்டுக்குள் ஓடிய யானை பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முவாங் மாவட்டத்தில் புவாரா சுற்றுலா யானைகள் முகாம் உள்ளது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யானை மீது சவாரி செய்வது வழக்கம். அந்த வகையில் அங்கிருந்த 18 வயது ஆண் யானை ப்ளாய் மீயூ, ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணியையும் அவரது 8 வயது மகளையும் முதுகில் சுமந்துகொண்டு வனப்பகுதிக்குச் சென்றது. யானையை அதன் பாகன் சூக் சுப்மார்க் (60) வழிநடத்திச் சென்றார்.

இந்நிலையில் திடீரென கோபமடைந்த அந்த யானை, ஆக்ரோஷமாக பாகனை மிதித்துக் கொன்றுவிட்டு, அந்த 2 பேரையும் சுமந்தபடி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகன்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், போலீஸார், அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று யானையைத் தேடினர். அப்பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட் அருகே பனை மரக் காட்டில் சுற்றித் திரிந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு, 2 சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

இதற்கிடையே, பாகன் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் இருந்த அவரது சடலம் மீட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x