Published : 10 Dec 2013 10:00 AM
Last Updated : 10 Dec 2013 10:00 AM
தாய்லாந்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தை திங்கள்கிழமை கலைத்தார் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (46). அடுத்த ஆண்டு பிப்ரவரி 2க்குள் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
எனினும், ஷினவத்ரா பதவி விலகி, மக்கள் கவுன்சில் அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை தொலைக்காட்சியில் கூறுகையில், "அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த பிறகு, நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிதாக தேர்தல் நடத்துமாறு மன்னரைக் கேட்டுக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும்" என்றார்.
இதுகுறித்து தாய்லாந்து தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர் சொட்ஸ்ரீ சட்டயதம் கூறுகையில், "500 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழ் அவைக்கு 60 நாட்களுக்குள் அல்லது 2014 பிப்ரவரி 2-ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும்" என்றார்.
தாய்லாந்து நாட்டு சட்டப்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷினவத்ரா பதவி விலக வலியுறுத்தல்
எனினும், அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக் கால அரசின் தலைவராக தாம் நீடிக்கப்போவதாக ஷினவத்ரா கூறியுள்ளார். ஆனால், நாடாளுமன்றத்தைக் கலைத்தால் மட்டும் போதாது, ஷினவத்ரா பதவி விலகி, புதிய இடைக்கால அரசு அமையும் வரை போராட்டம் தொடரும் என அரசு எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து போராட்டக்குழு தலைவர்களில் ஒருவரான சடிட் வொங்னாங்டே கூறுகையில், "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பது நமக்குக் கிடைத்த முதல் வெற்றி. ஆனால் ஜனநாயகத்தை அடைவதற்கு இது மட்டும் போதாது" என்றார்.
காபந்து அரசு பதவி விலகி மக்கள் கவுன்சில் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று சுதேப் தவூக்சுபன் தலைமையிலான மக்கள் ஜனநாயக மறுசீரமைப்புக் குழு விரும்புவதாகவும் சடிட் தெரிவித்தார்.
இதற்கிடையே, அடுத்த தேர்தலை ஷினவத்ரா நடத்துவார் என நம்புவதாக துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான சுரபாங் டொவிச்சைகுல் தெரிவித்தார். இதுகுறித்து ஷினவத்ரா எதுவும் கூறவில்லை.
அமைதி காக்க வேண்டுகோள்
பொதுமக்களும் மாணவர்களும் போராட்டத்தைக் கைவிட்டு வீட்டுக்குத் திரும்புமாறு உள்துறை அமைச்சர் மற்றும் 2 துணைப் பிரதமர்கள் ஆகியோர் என்பிடி சேனலில் வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக, முன்னாள் பிரதமர் அபிசிட் வெஜ்ஜஜீவா தலைமையிலான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 153 எம்.பி.க்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள வருமான தனது சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவின் நிழலாக யிங்லக் ஷினவத்ரா செயல்படுவதாகக் கூறி, கடந்த 2 வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு எதிர்ப்பாளர்கள். இந்தப் போராட்டத்தில் 5 பேர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். முன்னதாக, திங்கள்கிழமை காலை சுமார் 1 லட்சம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசு இல்லத்தை முற்றுகையிட்டனர். இதனால், இங்குள்ள நிலைமையை கண்காணிப்பதற்காக வந்திருந்த வெளிநாட்டு பார்வையாளர்களை வரவேற்கும் திட்டம் கைவிடப்பட்டது.
அரசு எதிர்ப்பாளர்களின் முக்கிய தலைவர் சுதேப் தவூக்சுபன், "இன்றுடன் ஷினவத்ரா அரசுக்கு முடிவுகட்ட வேண்டும்" என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 2010-ல் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் தக்ஷின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 90 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அபிசித் தலைமையிலான அரசு ஆட்சியை இழந்தது. இதையடுத்து 2011-ல் ஷினவத்ரா பிரதமரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT