Published : 15 Nov 2014 07:42 PM
Last Updated : 15 Nov 2014 07:42 PM
காப்பியில் பொதுவாகக் காணப்படும் ரசாயனம் ஒன்று உடல் எடை கூடுவதைத் தடுப்பதுடன், உடல் பருமன் தொடர்பான நோய்களையும் எதிர்ப்பதாக புதிய ஆய்வு ஒன்று கோரியுள்ளது.
அந்த ரசாயனம் குளோரோஜெனிக் அமிலம் ஆகும். இது இன்சுலின் தடுப்பைக் குறைப்பதோடு, லிவர்களில் கொழுப்பு சேர்வதையும் தடுப்பதாக எலிகளிடத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இந்த ஆய்வு கோரியுள்ளது.
குளோரோஜெனிக் அமிலம் அழற்சியையும் குறைப்பதாக இந்த ஆய்வின் தலைவர் யாங்ஜி மா என்பவர் தெரிவித்துள்ளார்.
உடல்பருமனின் பிரதான விளைவுகள் இரண்டு: உடல் எடை கூடுவது ஒருபுறம் இருந்தாலும், அதிகரிக்கும் இன்சுலின் தடுப்பு மற்றும் லிவரில் கொழுப்பு சேர்வது ஆகிய இரண்டும் மிக முக்கியமான விளைவுகளாகும்.
இந்த ஆய்வாளர்கள் எலிகள் சிலவற்றிற்கு உயர்-கொழுப்பு உணவுகளை 15 வாரங்களுக்கு கொடுத்ததுடன், குளோரோஜெனிக் அமிலத்தையும் வாரம் இருமுறை ஊசி மூலம் செலுத்தியுள்ளனர்.
அப்போது குளோரோஜெனிக் அமிலம் உடல் எடை கூடுவதை தடுத்ததுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவை சகஜநிலையில் வைத்திருந்ததும், லிவர் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டதாகவும் கண்டறிந்தனர்.
சாதாரணமாக மனிதர்கள் உட்கொள்ளும் காப்பி மற்றும் பழங்கள், காய்கறிகள் அளவைக் காட்டிலும் அதிக அளவிலான குளோரோஜெனிக் அமிலம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டது.
"இதற்காக மக்கள் அதிக அளவில் காப்பி குடிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துவதாக நினைத்து விடக்கூடாது. ஆனால், ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுபவர்களிடத்தில் குளோரோஜெனிக் அமிலம் மூலம் உடல் எடை, மற்றும் பருமன் பிரச்சினைகளுக்கு பயனுள்ள சிகிச்சையை வளர்த்தெடுக்க முடியும் என்றே கூறுகிறோம்” என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,
இந்த ஆய்வு பார்மசூட்டிக்கல் ரிசர்ச் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT