Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

விரயமாகும் மனித சக்தி

ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் உணவு வீணாகும்பொழுது பதற்றமாக இருக்கிறது. பரிமாறிய உணவில் சராசரி 30% வீணடிக்கப்படுகிறது என்பது என் கணிப்பு. சில தொழிற்சாலை உணவகங்களில் “இந்த நாளில் இத்தனை கிலோ உணவு வீணடிக்கபட்டது” என்று பலகையில் எழுதி வைப்பதுண்டு. கல்யாண வீட்டில் இதைச் செய்தால் சம்மந்தி சண்டையில்தான் முடியும்.

பஃபே வந்தால் விரயம் குறையும் என்று பார்த்தால் ஊஹும்! இந்த உயர்தர கையேந்தி உணவகத்தில் நம் மக்கள் வரிசையாக நின்று என்ன எது என்று தெரியாமல் தட்டை நிரப்பி வீணடிக்கிறார்கள். “திரும்ப திரும்ப யார் கூட்டத்தில் நிற்பது? அதான் எல்லாத்தையும் போட்டாச்சு!” பற்றாக்குறைக்கு மலைவாழைப்பழம் அளவில் சின்ன பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் அடைத்து கொடுக்கிறார்கள். சுகாதாரமாம்! அதிலும் ஆளுக்கு ரெண்டு எடுத்து பாதி குடித்து குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள்.

இந்த சின்ன தண்ணீர் பாட்டிலுக்கு எதிராக ஏன் எந்த சுற்றுப்புற அமைப்பும் வழக்கு போடவில்லை என்று தெரியவில்லை. கான்ஃப்ரன்ஸ் ஹாலில் ஆரம்பித்து இப்போது எல்லா கல்யாண வீடுகளிலும் புகுந்து வருகிறது. யாராவது அதன் விலையையும், நீரின் அளவு மற்றும் தரத்தையும், பிளாஸ்டிக் பாட்டில் குப்பைகள் ஏற்படுத்தும் பாதிப்பையும் யோசித்தால் விக்கல் வந்தாலும் வீட்டுக்கு வந்துதான் தண்ணீர் குடிப்பார்கள். அந்த பாட்டிலைத் தொட மாட்டார்கள்.

இந்தியா போன்ற வளரும் தேசத்தில் சோறும் நீரும் விரயமாதல் குற்றம்.

நம் நாட்டில்தான் எத்தனை எத்தனை விரயம்? குற்றுயிராய் கிடக்கும் விவசாயம் தந்த விளைபொருளில் மூன்றில் ஒரு பங்கு கிடங்குகளில் வீணாவதாக அரசுக் குறிப்பே தெரிவிக்கிறது.

ஒரு அரசியல் தலைவர் அழைக்கிறார் என்றால் ஊரே ஸ்தம்பிக்கும் அளவுக்குக் கூட்டம். போக்குவரத்து நெரிசலால் ஆகும் எரிபொருள் விரயம் யாரும் கணக்கில் கொள்ளாதது. அது மட்டுமா? பத்து அடிக்கு ஒரு ஃப்லெக்ஃஸ் கட் அவுட். மற்றும் ஒரு டியூப் லைட். இதற்கு செலவு (அல்லது முதலீடு) செய்வது கட்சியாக இருக்கலாம். ஆனால் இதை திருப்பி எடுப்பது நம் பாக்கெட் டுகளிலிருந்து தானே?

மக்கள் கூட்டத்தைப் பற்றி என்ன சொல்ல? ஒரு லட்சம் பேர் வந்து கை தட்டி, கோஷம் எழுப்பிப் போகிறார்கள். யாரோ யாருடனோ பேரம் நடத்த இவர்கள் மலிவாக பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு தவிர யாருக்கு லாபம்?

உழைக்காமல் உண்பது, மனசாட்சியை காசுக்கு விற்பது, பிறர் உழைப்பில் வாழ்வது, எந்த உறுத்தலும் இல்லாமல் எதையும் செய்யாமல் சும்மா இருப்பது போன்ற வாழ்க்கை முறைகளை உருவாக்குவது அரசியல்வாதிகளுக்குப் பயன்படும். காரணம் இவர்கள்தான் நிலையான வாக்கு வங்கிகள். ஆனால் இது ஒரு நல்ல தேசத்தை உருவாக்க உதவாது.

மேற்கொண்டவை அனைத்தும் பெரும்பாலும் ஆண்களுக்கே பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது. பெண்கள் சம்பாதித்து ஆண்கள் சாப்பிடும் குடும்பங்கள் பெருகி வருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஒரு முக்கிய குப்பத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த உதவினோம். வேலை வேண்டும் என்று பதிவு செய்தவர்களில் 126 பேர் பெண்கள். 12 ஆண்கள். சில ஆண்கள் அன்றே போதையுடன் வந்து பெண்களை தடுத்து நிறுத்தும் காரியங்களைச் செய்தார்கள். பெண்களின் ஊதியம் ஆண்கள் தயவில் டாஸ்மாக் மூலமாக அரசாங்கத்திற்கு சென்று கொண்டிருப்பது தான் உண்மை.

என் வீட்டின் அருகே ஒரு மனிதரை பார்த்திருக்கிறேன். அவர் 30 வருடங்களாக எந்த வேலைக்கும் செல்லவில்லை. கடை வாடகை வருகிறதாம். மாதம் ஒரு முறை வசூலிப்பதுதான் ஒரே வேலை. சின்ன வயதில் அவரைப் பற்றி என் தந்தையிடம் பரிகாசமாய் சொல்வேன்: “அவர் தினம் 100 செங்கல்ல எடுத்து வச்சிருந்தா கூட ஒரு அணைக்கட்டே கட்டியிருக்கலாம்!”

இது அவருக்கு மட்டுமா பொருந்தும்? ஒவ்வொரு பிராயணத்திலும் பலர் பகல் பொழுதுகளில் எதுவும் செய்யாமல் கிடப்பதைப் பார்க்கையில் இந்த தேசத்தின் மிகப்பெரும் விரயம் மனித சக்தி விரயம்தான் என்று தோன்றும்.

மின்சாரத்தைச் சேமிக்கணும், நீரை சேமிக்கணும், பெட்ரோலை சேமிக்கணும் என்பதைப்போல மனித சக்தியை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உலகில் சுமார் 50 கோடி இளைஞர்கள் கொண்ட ஒரே நாடு இந்தியா. இவர்கள் சக்தியை விரயமாக்காமல் பார்த்துக் கொள்வதும் அதை திறம்பட பயன்படுத்துவதிலும் தான் நம் எதிர்காலம் உள்ளது.

சீனா சென்று வந்த நண்பர் சொன்னார். அங்கு 70 வயது முதியவர்கள் கூட வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்களாம். ஒரு பொம்மை தொழிற்சாலை காலை வண்டியில் மூலப்பொருட்கள் அனுப்பினால் மாலை வந்து உற்பத்தியான பொருட்களை வாங்கிச்செல்கிறதாம். பீஸ் ரேட்டுக்கு கூலியாம். உழைக்காமல், சம்பாதிக்காமல் ஒருவரும் இல்லை என்றார்.

நாம் வல்லரசு ஆவோம் என்று வாய் வலிக்க பேசிக்கொண்டிருக்கிறோம் . அவர்கள் கை வலிக்க வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கு ஒரு மனித சக்தி ஆய்வு தேவைப்படுகிறது. 18 முதல் 58 வயது உள்ளோர் எல்லாருக்கும் அவரவர் தகுதிக்கும் சக்திக்கும் ஏற்ற வேலைகள் என்ன என்று கணக்கு எடுக்க வேண்டும். அதுபோல கையிருப்பில் உள்ள வேலைகளும் வருங்காலத்தில் வரும் வேலைகளும் என்னென்ன என்றும் பட்டியலிட வேண்டும். பின்னர் தன் முன்னுரிமைப்படி அதற்கான வேலைத்திறன்களை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.

அதுபோல, மூன்று தரப்பினரின் மனித சக்தி விரயமாகாமல் தடுக்கலாம்.

ஒன்று, முதியவர்கள். பழுத்த அனுபவம் கொண்ட இவர்களில் பலர் இன்னமும் பணி செய்யத் தகுதியானவர்கள். பலர் பணத்திற்காக மட்டும் இல்லாமல் தங்கள் திறமைகளை நல்ல நோக்கங்களுக்கு செலவிடத் தயாராக உள்ளனர். தகுந்த வேலையும் குறுகிய வேலை நேரமும் நல்ல அங்கீகாரமும் இவர்களைக் குறைந்த சம்பளத்திற்கே பணி செய்யத் தூண்டும்.

இரண்டு, இல்லத்தரசிகள். கணவனும் குழந்தைகளும் இல்லா நேரத்தில் வீட்டிலிருந்தோ அல்லது 10 முதல் 3 மணி வரை வெளியிலோ அவர்கள் திறமைக்கு ஏற்ப பணிகள் கொடுத்தால் அது அவர்கள் வாழ்க்கையை மேலும் அர்த்தப்படுத்தும். பல படித்த பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பணியிலிருந்து நின்ற பிறகு நம்பிக்கை இழந்து வீட்டிலேயே முடங்கிப் போகிறார்கள். அவர்களின் சுதந்திரம் நம் பொருளாதாரத்திற்கும் பயன்படும்.

மூன்று, மாணவர்கள். எந்த டிகிரி படித்தாலும் வாரம் 10 மணி நேரமாவது எங்காவது பகுதி நேர வேலை செய்யலாம். அயல் நாடுகளில் இது சகஜம். நம் குடும்பங்கள் இதை அனுமதிக்க வேண்டும். இது பணத்திற்காக அல்ல. முனைப்பு, கற்றல், தன்னம்பிக்கைக்காக என்று உணர வேண்டும். பணியிடத்தில் எப்படி பழக வேண்டும் என்கிற பாடம் அவர்களுக்கு கிட்டும். பல சிறு வேலைகளை நிறுவனங்கள் இவர்களிடம் தரத் தயாராக உள்ளன.

பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய கூறு உண்டு. அது மனித வளம் சார்ந்த நம் பொருளாதாரத்திற்கும் பொருந்தும்: பயன்படுத்து அல்லது இழந்து விடு.

Use it or Lose it!

டாக்டர். ஆர். கார்த்திகேயன்- gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x