Published : 15 Mar 2014 12:09 PM
Last Updated : 15 Mar 2014 12:09 PM

முதல் சூரிய சக்தி கழிவறை இந்தியாவில் அறிமுகம்: தண்ணீர் தேவையில்லை; சுற்றுச் சூழலுக்கு உகந்தது

உலகின் முதல் சூரிய சக்தி கழிவறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக் கழிவறை வரும் 22-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, “கழிவறை சவால்களுக்கு மறுஉருவாக்கம்’ என்ற தலைப்பில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஈடுபட்ட லிண்டன் குழுவினர் சூரிய சக்தியில் செயல்படும் கழிவறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

இக்கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள எட்டு சூரிய சக்தித் தகடுகள் மூலம் சூரிய ஒளி, மின்சாரமாக மாற்றப்படுகிறது. இக்கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி இழை வடங்கள் 600 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பத்தை வெளிப்படுத்தி மனிதக் கழிவுகளை உயிரிக் கரிமமாக (பயோகார்) மாற்றுகின்றன.

இந்த உயிரிக் கரிமத்தை வேளாண்துறையில் மண்வளத்தைப் பெருக்கப் பயன்படுத்தலாம். கார்பன் வெளியேற்றப்படாமல் மண்ணிலேயே தக்கவைக்கப்படுவதன் மூலம் பசுமையில்ல வாயுவான கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு) காற்றுமண்டலத்தில் கலப்பது தடுக்கப்படுகிறது. மண் வளத்தைப் பெருக்கும் உயிரிக் கரிமம், மண்ணுடன் 10 சதவீதம் சேர்க்கப்பட்டால் அது வழக்கமான மண்ணை விட 50 சதவீதம் அதிக அளவு நீரைத் தக்கவைக்கும் திறனைப் பெறுகிறது. இதனால், பயிர்களுக்குத் தேவையான நீரும், ஊட்டச் சத்துகளும் போதிய அளவு கிடைக்கும்.

இந்த உயிரிக் கரிமத்தை, உயிரி நிலக் கரியாக எரிக்கவும் செய்யலாம். வர்த்தக ரீதியாக எரிக்கும் உயிரி நிலக்கரிக்கரியை விட இந்த உயிரிக் கரிமம் அதிக வெப்பத் ததைத் தர வல்லது.

தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரு கழிப்பறை ஒரு நாளில் 4 அல்லது 6 நபர்கள் பயன்படுத்தும் வகையிலானது. இப்புதிய கழிவறையை குறிப்பிட்ட வகையில் இணைப்பதன் மூலம் பல குடும்பத்தினர் பயன்படுத்த முடியும்.

பாதுகாப்பற்ற கழிவறைகளால் சேமிக்கப்படும் மனிதக் கழிவுகள், பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன. இவற்றால் உணவு மற்றும் நீர் மாசுபடுவதுடன், ஆண்டு தோறும் உலகம் முழுவதும் 7 லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது.

சோதனை முறையில் உருவாக்கப்பட்ட இக்கழிவறைகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை டெல்லியில் வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இந்திய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x