Published : 07 Nov 2014 11:30 AM
Last Updated : 07 Nov 2014 11:30 AM

இஸ்ரேல் பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: தீவிரவாத அச்சுறுத்தல்களை இணைந்து எதிர்கொள்ள உறுதி

இஸ்ரேல் சென்றுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசினார். அப்போது தீவிரவாதம், சைபர் தீவிரவாத அச்சுறுத் தல்களை எதிர் கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த செப்டம்பரில் நியூயார்க் கில் நடைபெற்ற ஐ.நா. பொது சபை கூட்டத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவும் சந்தித்துப் பேசினர். அப்போது இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

தற்போதைய நிலையில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலில் இருந்துதான் இந்தியா அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்து வருகிறது. அந்த நாட்டிடம் இருந்து ரூ.3200 கோடியில் 8356 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க கடந்த அக்டோபரில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி மதிப்பிலான ஆயுதங் களை இந்தியாவுக்கு இஸ்ரேல் வழங்கியுள்ளது.

ராணுவ துறை தவிர்த்து வேளா ண்மை, அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களிலும் இந்தியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளை இஸ்ரேல் அளித்து வருகிறது.

சிவப்பு கம்பள வரவேற்பு

இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றுமுன்தினம் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றார்.

பொதுவாக ஒரு நாட்டின் தலைவருக்கு மட்டுமே இஸ்ரேல் அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும். மிகவும் நெருங்கிய நட்பு நாடு என்ற வகையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. நேற்றுமுன்தினம் இரவு அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். அப்போது தீவிரவாதம், சைபர் தீவிர வாத அச்சுறுத்தல்களை எதிர் கொள்ள இருநாடுகளும் இணைந்து செயல்பட உறுதி மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சந்திப்புக்கு பிறகு ராஜ்நாத் சிங் கூறியபோது, தீவிர வாதத்தால் இந்தியா, இஸ்ரேல் மட்டுமல்ல, உலகமே பாதிக்கப்பட் டிருக்கிறது. இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை எதிர் கொள்ளும் என்று தெரிவித்தார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியபோது, இந்தியா, இஸ்ரேல் உறவைப் பொறுத்தவரை வானமே எல்லை என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது தடை யற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற் கொள்ள இருநாடுகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இது தொடர்பாக விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

‘மேக் இன் இந்தியா’ திட்டம்

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தி யாவில் உற்பத்தியைத் தொடங்க ஊக்குவிக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து நெதன்யாகுவிடம் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். இத்திட்டத்தை நெதன்யாகு வரவேற்று ஆதரவு தெரிவித்தார்.

தனது பயணத்தின்போது இஸ்ரேல் தொழிலதிபர்களுக்கு ராஜ்நாத் சிங் விடுத்துள்ள அழைப் பில், பாதுகாப்புத் துறை உள்பட அனைத்து துறை நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கணிதத்தின் மறுபெயர் இந்தியா

பெஞ்சமின் நெதன்யாகுவை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசிய போது இருவரும் தனிப்பட்ட முறையில் நீண்ட நேரம் உரையாடினர்.

அப்போது நெதன்யாகு கூறியதாவது: எனது மாமா மிகச் சிறந்த கணித நிபுணர். அவர் என்னிடம் அடிக்கடி ஒன்றை கூறுவார். இந்தியாவில் இருந்துதான் மிகச் சிறந்த கணித நிபுணர்கள் உருவாகிறார்கள். வேறு எந்த நாட்டு கணித நிபுணரும் இந்தியர்களுக்கு ஈடு இணை கிடையாது. கணிதத்தின் மறுபெயர் இந்தியா என்று எனது மாமா கூறுவார் என்றார்.

அவரது பாராட்டுக்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்து கொண்டார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு இயற்பியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிய அவர் அந்த அனுபவத்தை நெதன்யாகுவுடன் நினைவுகூர்ந்தார். ஜெர்மனியைச் சேர்ந்த யூத கணிதவியல் நிபுணர் வெர்னர் ஹூசன்பர்க் குறித்தும் அவர் இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் வீட்டின் தங்கியிருந்தது குறித்தும் ராஜ்நாத் சிங் பல்வேறு தகவல்களை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x