Published : 13 Jan 2014 11:13 AM
Last Updated : 13 Jan 2014 11:13 AM
இஸ்ரேலியர்களுக்கு பாலஸ்தீனர்கள் அடிபணிய மாட்டார்கள், கிழக்கு ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன தலைநகர் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுத்தர முடியாது என்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உறுதிபட தெரிவித்தார்.
இஸ்ரேல் – பாஸ்தீனம் இடையே சமரசப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி முயன்று வரும் நிலையில், அவருக்கும் இஸ்ரேலுக்கும் அப்பாஸ் விடுக்கும் தகவலாக இப்பேச்சு கருதப்படுகிறது. அப்பாஸின் இந்த அனல் பறக்கும் பேச்சு அவருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருவதற்கும் பெரிய இடைவெளி இருப்பதையே காட்டுகிறது.
அப்பாஸ் தனது ஆதரவாளர் களின் மத்தியில் பேசுகையில், “கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீன தலைநகர் அமைக்கப்படாவிட்டால் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை. இஸ்ரேல், யூதர்களின் நாடு என்பதை ஏற்க முடியாது. அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவான ஏப்ரல் இறுதிக்குப் பிறகு நான் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன். பாலஸ்தீன நாட்டுக்கு ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவை பெறுவதற்கான விரிவான முயற்சிகளில் இறங்கு வேன்” என்றார்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டு பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த ஜூலை மாதம் முயற்சி மேற்கொண்டார். இதில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், இஸ்ரேலிய, பாலஸ்தீன தலைவர்கள் தங்கள் அடிப்படை கோரிக்கைகளில் இருந்து இறங்கிவர மறுக்கின்றனர்.
ஜான் கெர்ரி வரும் வாரங்களில் வரைவு உடன்பாட்டுக்கான தனது பரிந்துரைகளை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவர் தனது முயற்சிக்கு அரபு லீக் ஆதரவை பெறும் வகையில் அந்நாட்டுத் தலைவர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
1967-ல் இஸ்ரேல் கைப்பற்றிய மேற்கு கரை, காசா, கிழக்கு ஜெரு சலேம் பகுதிகள் தங்களுக்கு தரப் படவேண்டும் என பாலஸ்தீனம் வலியுறுத்துகிறது. ஆனால் இந்தப் பகுதிகளில் பெருமளவில் யூதர்களின் குடியிருப்புகளை இஸ்ரேல் உருவாக்கியிருப்பதால், பெயரளவுக்கு சில பகுதிகளை விட்டுத்தர விரும்புகிறது.
1967ம் ஆண்டு எல்லையை, பேச்சு வார்த்தைக்கு அடிப்படையாகக் கொள்வதோ, கிழக்கு ஜெருசலேம் பகுதியை பேச்சுவார்த்தை உட்பட்டதாக அறிவிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என நெதன்யாகு கூறி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT