Last Updated : 12 Nov, 2014 09:47 AM

 

Published : 12 Nov 2014 09:47 AM
Last Updated : 12 Nov 2014 09:47 AM

மனசாட்சி உறுத்தல்: போரில் கொன்றவரின் குடும்பத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு தேடும் ராணுவ வீரர்

மனசாட்சி உறுத்தலின் காரணமாக சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போரில் தான் கொலை செய்த வீரரின் குடும்பத்தை தேடி வருகிறார் பிரிட்டன் முன்னாள் ராணுவ வீரர்.

1982-ம் ஆண்டு பிரிட்டன் – ஆர்ஜென்டீனா இடையே நடைபெற்ற பாக்லாந்து போரில் பிரிட்டன் ராணுவ வீரர் கார்டன் ஹோகன் ஆர்ஜெண்டீனாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவரை தனது துப்பாக்கி முனையில் இருந்த கத்தியால் குத்தி கொலை செய்தார்.

போரில் எதிர் நாட்டு வீரர்களை கொல்வது பெரிய விஷயம் இல்லை என்பதால் அப்போது கார்டன் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டார். 2001-ம் ஆண்டு அவரது மனைவி விவாகரத்து பெற்றார். இதுபோன்று வாழ்க்கையில் நடந்த சில சோக நிகழ்வுகளால் கார்டன் கடுமையாக பாதிக்கப்பட்டார். இத்துடன் ஆர்ஜெண்டீனா வீரரை கொலை செய்ததும் பெரிய உறுத்தலாக சேர்ந்து கொண்டது.

அந்த சம்பவம் அவரை தூங்கவிடாமல் செய்தது. இதையடுத்து தான் கொலை செய்த வீரரின் குடும்பத்தினரை சந்தித்து மன்னிப்புக் கேட்கவும், கொலை செய்த வீரரின் தலை கவசத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்து, அவர்களை தேடி வருகிறார்.

1982-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், பாக்லாந்து போரின்போது நாங்கள் இரவு 1 மணியளவில் எதிரி நாடான ஆர்ஜெண்டீனா வீரர்களை விரட்டும் நோக்கில் சண்டையிட்டு வந்தோம். அப்போது இருண்ட குகையில் கடுமையான குளிரில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆர்ஜெண்டீனா கடற்படை வீரரை நான் நேருக்குநேர் எதிர்கொண்டேன். எங்களில் யாராவது ஒருவர் உயிரிழக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து என்னை சுட முயன்றார்.

நான் அதற்குள் எனது நீண்ட துப்பாக்கி முனையில் இருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தி வீழ்த்தினேன். அப்போது அதைத் தவிர வேறு வழியில்லை. எனினும் அவரை கொலை செய்ததால் பல இரவுகளை தூக்கமின்றி கழித்துள்ளேன். அவரது குடும்பத்தினர் என்னை எதிரியாகவே பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் எனது மனசாட்சி உறுத்தல் காரணமாக அவரது குடும்பத்தை சந்திக்க விரும்புகிறேன் என்று கார்டன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x