Published : 23 Mar 2014 12:24 PM
Last Updated : 23 Mar 2014 12:24 PM

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்: அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப் பட்டு வருவது கவலை அளிக் கிறது என்று அமெரிக்கா தெரிவித் துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் ரூகி பெர்னாண்டோ, பாதிரியார் பிரவீண் மகேசன் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்களை இலங்கை அரசு விடு வித்துவிட்டாலும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் தவிர மேலும் சில மனித உரிமை ஆர்வலர்களை இலங்கை பாதுகாப்புப் படையினர் அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படு கிறது.

நாட்டின் நலனுக்காக மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் சொந்த நாட்டு மக்களை இலங்கை அரசு துன்புறுத்துவது கவலை அளிக்கிறது. இது இலங்கையின் நீண்ட நெடிய ஜனநாயகத்துக்கு எதிரானது.

இலங்கையில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். அந்த நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் பேச்சு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று ஜென் சாகி தெரிவித்தார்.

பிரிட்டன் மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

பிரிட்டன் மனித உரிமை கமிட்டி மற்றும் சர்வதேச உண்மை, நீதித்துறை திட்டம் ஆகியவை இணைந்து ஓர் அறிக்கையை நேற்று வெளியிட்டன. அதில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டபோது தமிழ்ப் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப் பட்டதாகவும் பல்வேறு கொடுமை களுக்கு ஆளானதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இப்போதுவரை தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர் கிறது. வன்முறை, குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர் என்று அறிக்கையைத் தயாரித்த ஐ.நா. ஆலோசகரும் தென்ஆப்பிரிக்காவின் மூத்த வழக்கறிஞருமான யாஸ்மின் சூகா தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களைக் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x