Last Updated : 25 Nov, 2014 12:33 PM

 

Published : 25 Nov 2014 12:33 PM
Last Updated : 25 Nov 2014 12:33 PM

30,000 பிறந்தநாள் வாழ்த்துக் கடிதங்கள்: மகிழ்ச்சியில் திணறிய மாற்றுத்திறனாளி இளைஞர்

நவம்பர் 22-ம் தேதி தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடிய இமானுவேல் பாரிஸ்சியாக்ஸுக்கு உலகம் முழுவதும் இருந்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாழ்த்துக் கடிதங்கள் குவிந்தன. கேக்குகள், சாக்லெட்டுகள் என பரிசுகளோடு குவிந்த வாழ்த்துகளால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் இமானுவேல்.

இமானுவேல் அப்படியொன் றும் பிரபலமானவர் அல்ல. பிறகு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக் கடிதங்கள் குவிந்தது எப்படி?

பிரான்ஸைச் சேர்ந்த இமானுவேல். இவர் ‘டவுண் ஸின்ட்ரோம்' எனும் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இக்குறைபாடு 21-வது குரோமோசோமில் ஏற்படும் மரபணுப் பிழை காரணமாக ஏற்படுகிறது. எவ்வளவு வயதானாலும் 8 வயதுக் குழந்தைக்கு இருக்கும் மனமுதிர்ச்சிதான் இருக்கும். இது பல்வேறு நோய்களின் கூட்டு நோய் என்றும் கூறலாம்.

இமானுவேலின் தாய், ஜாக்குலின் குழந்தைகள் பராமரிப்பாளராக உள்ளார். ஜாக்குலினும் அவரது கணவரும் தங்களது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு, பேஸ்புக்கில் ஒரு கோரிக்கையைப் பதிவு செய்தார். ‘ டவுன்ஸின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் மகனுக்கு நவம்பர் 22-ம் தேதி பிறந்தநாள். அவனுக்கு சிறிய வாழ்த்துக்கடிதம் அனுப்புங்கள். உங்கள் நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள்” என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இப்பதிவு பேஸ்புக்கில் உடனடியாகப் பிரபலமானது. பல்வேறு நாடுகளிலிருந்து வாழ்த்துக் கடிதங்கள் குவியத் தொடங்கின. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் குவிந்ததால், அவற்றை வைக்க இடமின்றி, பக்கத்து வீட்டுக்காரரின் கிடங்கில் அவற்றை பத்திரப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக ஜாக்குலின் கூறியதாவது: இவ்வளவு வாழ்த்துக் கடிதங்கள் வரும் என எதிர்பார்க்கவில்லை. இமானுவேலின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. ஆரம்பத்தில் 10, 20 என வந்த கடிதங்களின் எண்ணிக்கை பின் உலகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கில் வந்தது. பிறகு, தபால் துறையினர் லாரியில் பெரும் சுமையாகக் கொண்டு வந்து கடிதங்களைக் கொடுத்தனர். மழையென வாழ்த்துக் கடிதங்கள் பொழிந்து விட்டன.

சில குழந்தைகள் ஓவியங்களை வரைந்து அனுப்பியுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாழ்த்துக்கடிதங்கள், சாக்லெட், சாவிக் கொத்துகள், கேக்குகள் என ஏராளமான பரிசுகள் வந்துள்ளன.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x