Published : 07 Sep 2016 03:09 PM
Last Updated : 07 Sep 2016 03:09 PM
புவி வெப்படைதல் விளைவுகளால் உலகின் கடல்கள் வெப்பமயமாகி வருவதால் மனிதர்கள், விலங்குகளிடத்தில் இனம்புரியாத நோய்களைப் பரப்புவதோடு புவி நெடுகிலும் உணவுப்பாதுகாப்பை அச்சுறுத்தியுள்ளது.
12 நாடுகளைச் சேர்ந்த 80 ஆய்வு விஞ்ஞானிகள் ஹவாயில் நடைபெற்ற சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் உலக பாதுகாப்பு மாநாட்டில் தங்களது ஆய்வுக் கண்டுபிடிப்புகளை தெரிவித்தனர்.
“கடல்கள்தான் இந்த உலகை காப்பற்றி வருகிறது. ஒவ்வொரு விநாடியும் நாம் சுவாசிக்கும் பிராணவாயுவை கடல்களே வழங்குகின்றன. ஆனாலும் கடல்களை நாம் நோய்க்கூறு உருவாக்க காரணியாக்கி விட்டோம்.” என்று இயற்கைப் பாதுகாப்பு சர்வதேச அமைப்பின் தலைமை இயக்குநர் இங்கர் ஆண்டர்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவர்கள் ஆய்வறிக்கையின் தலைப்பு, “கடல் வெப்பமடைதலை விளக்குதல்” என்பதாகும். இதுவரையல்லாத அளவில் புவிவெப்பமடைதலால் கடல் எந்த அளவுக்கு வெப்பமயமாகி வருகின்றன அதன் விளைவுகள் என்னன்ன என்பதை வேறு எந்த முந்தைய ஆய்வும் எடுத்தியம்பியதில்லை என்று இந்த ஆய்வைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
1970களுக்குப் பிறகு பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் உலக உஷ்ணத்தில் 93%-ஐ கடல் தனக்குள் உறிஞ்சுகிறது. இதனால் நிலத்தில் உணரப்படும் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்தாலும் கடலுக்குள் இருக்கும் உயிர்வாழ்க்கையின் லயத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளது என்கிறது இந்த ஆய்வு.
“கடல்கள் நம்மை காப்பாற்றுகின்றன, ஆனால் அதன் விளைவுகள் பெரிய அளவிலானது என்பதே இதன் தீர்க்கவியலா முரண்” என்கிறார் லஃபோலே என்ற கடல் ஆய்வு விஞ்ஞானி.
நுண்ணுயிரிகள் முதல் திமிங்கிலங்கள் வரை:
இந்த ஆய்வில் ஒவ்வொரு கடல் சூழலமைவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆழ்கடல் முதல் மேற்பரப்பு வரை நுண்ணுயிரிகள் முதல் திமிங்கிலங்கள் வரை கடல் வெப்ப அதிகரிப்பு எப்படி பாதிப்பை உண்டாக்குகின்றன என்பதே இந்த ஆய்வின் சாராம்சம்.
ஜெல்லிஃபிஷ், கடல் பறவைகள், நுண்ணுயிர் மிதவைகள் ஆகியவை கடலில் குளிரான இடங்களை நோக்கி புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன.
“கடல் சூழலியல் அமைவில் கடல்வாழ் உயிரிகளின் இடப்பெயர்வு நிலத்தை ஒப்பிடும் போது 1.5 முதல் 5 மடங்கு வரை வேகமாக நடைபெறுகிறது. நாம் கடல்களின் சீசன்களை மாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் கடலியல் விஞ்ஞானி லஃபோலே.
மேலும் கடல் ஆமைகளின் பாலின விகிதமும் மாறுபடுகிறது. வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் பெண் பாலின கடல் ஆமைகளே அதிகம் பிறக்கும் நிலை தோன்றியுள்ளது, மேலும் கடல் உஷ்ணத்தினால் நுண்ணுயிரிகள் கடலின் மிகப்பரவலான பகுதிகளை ஆதிக்கம் செலுத்துகிறது. ஒட்டுமொத்தமான, கவலைதரும் விளைவுகளை நாம் பார்த்து வருகிறோம், என்கிறார் லஃபோலே.
இந்த ஆய்வறிக்கையின் தகவல்களில் பெரும்பாலும் புதிதானவை. இந்த ஆய்வுகள் பத்திரிகைகளில் 2014ம் ஆண்டு முதல் வெளிவந்தன, குறிப்பாக கடல் உஷ்ணமடைவதால் தாவரங்கள், விலங்குகளில் அதிக நோய்கள் உருவாவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
காலரா நோய்க்கூறுகளை சுமக்கும் பாக்டீரியாக்கள், நச்சு பாசிகள் ஆகியவை மனிதர்களில் நரம்பியல் நோய்களை ஏற்படுத்தி வருகின்றன.
லஃபோலே மேலும் கூறும்போது, “அறையில் உட்கார்ந்து ஆய்வு செய்பவர்களல்ல நாங்கள், தெரியாமலேயே எங்களை நாங்கள் சோதனைக்குழாய்க்குள் செலுத்திக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்” என்கிறார்.
உணவுப்பாதுகாப்புக்கு ஏற்படும் பாதகங்கள்:
உஷ்ணக்கடல்கள் பவளப்பாறைகளை முன்னெப்போதும் இல்லாத அளவில் அழித்து வருகின்றன. மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இதனால் உணவுப்பாதுகாப்புக்கு பாதகம் ஏற்பட்டுள்ளது.
“தென் கிழக்கு ஆசியாவில், 1970-2000-ம் ஆண்டு காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 2050-ம் ஆண்டுவாக்கில் மீன்களின் எண்ணிக்கை 10% முதல் 30% வரை குறைந்து விடும்” என்கிறது இந்த அறிக்கை.
பசுமை இல்ல வாயுக்கள் என்ற கிரீன் ஹவுஸ் கேஸ்களை வெளியேற்றுவதை நாம் கட்டுப்படுத்தியேயாக வேண்டிய நிலையில் உள்ளோம். நாம்தான் இத்தகைய நிலைமைகளுக்குக் காரணம் என்பதில் எள்ளளவு சந்தேகமும் நமக்கு வேண்டாம், விரைவில் இதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது இந்த ஆய்வு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT