Last Updated : 03 Nov, 2014 09:10 PM

 

Published : 03 Nov 2014 09:10 PM
Last Updated : 03 Nov 2014 09:10 PM

அறிவித்தவாறு தற்கொலை செய்துகொண்ட அமெரிக்க இளம் பெண்: கருணை கொலை உரிமை குறித்து சர்ச்சை

புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், ஏற்கெனவே அறிவித்தவாறு தற்கொலை செய்துகொண்டது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்நாட்டில் சில மாநிலங்களில் மட்டும் அமலில் இருக்கும் தற்கொலை உரிமை தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டனி மேனார்டு (29) என்ற இப்பெண் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்ட தற்கொலை அறிவிப்பு, இணைய தளம் பயன்படுத்தும் லட்சக்கணக்கானோர் மத்தியில் பரவியது.

“நான் மிகவும் நேசிக்கும் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு குட்பை. உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத எனது நோயின் பாதிப்பால் இருந்து கண்ணியத்துடன் விடைபெறுகிறேன்.

மூளை புற்றுநோய் என்னிடம் இருந்து நிறைய எடுத்துக்கொண்டது. இன்னும் எடுத்துக்கொள்ளக்கூடும். இந்த உலகம் மிகவும் அழகானது. பயணங்கள்தான் எனது ஆசிரியர். எனது நெருங்கிய நண்பர்களும், பழங்குடியினரும் எனது வாழ்க்கையில் மிகப்பெரும் பங்களிப்பை செய்துள்ளனர். குட்பை என்ற வார்த்தையை நான் பதிவு செய்யும் இந்த நேரத்திலும் என் படுக்கையச் சுற்றிலும் எனக்கு ஆதரவாக இருப்பவர்களை காண்கிறேன். இந்த உலகுக்கு குட்பை நல்ல சிந்தனைகளை பரப்புங்கள்” என்ற அவரது அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவியது.

அமெரிக்காவில் ஓரிகன் உள்ளிட்ட சில மாநிலங்களில் இறப்பதற்கான உரிமை (தற்கொலை உரிமை) தரப்பட்டுள்ளது. கொடிய நோய் காரணமாக இனி உயிர்பிழைக்க வாய்ப்பில்லாத ஒருவர், உயிர்க்கொல்லி மருந்தை (விஷம்) சாப்பிட்டு நோயின் அவதஸ்தையில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியும். இதற்கு மருத்துவர் பரிந்துரை அளிக்க வேண்டும்.

தற்கொலை உரிமையை அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கம்பேஷன் அண்டு சாய்ஸஸ் என்ற அமைப்பு போராடி வருகிறது.

இந்நிலையில் பிரிட்டனி மேனார்டு கடந்த 1-ம் தேதி அமைதியான முறையில் உயிர் நீத்ததாக (தற்கொலை செய்துகொண்டதாக) இந்த அமைப்பின் சீயன் கிரவ்லி நேற்று கூறினார்.

கடும் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மேனார்டு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் வாய்ப்புள்ளதையும் அவரது மரணம் மிகுந்த வலியை தரக்கூடியாத இருக்கும் என்றும் கடந்த ஜனவரியில் அவரிடம் கூறப்பட்டது. சமீபத்தில்தான் அவருக்கு டான் டயஸ் என்பவருடன் திருமணம் ஆகியிருந்தது. கடும் தலைவலி காரணமாக மருத்துவரை அணுகியபோது நோய் பாதிப்பு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியையும் கைவிட நேரிட்டது.

இதையடுத்து தற்கொலை முடிவு எடுத்த பிரிட்டனி கலிபோர்னியாவில் இருந்து ஓரிகனுக்கு இடம்பெயர்ந்தார். அமெரிக்காவின் பீப்பிள் இதழில் பிரிட்டனி பற்றிய கட்டுரை கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் அவரது தற்கொலை ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த உரிமை தொடர்பாக சர்ச்சைகளும் எழுந்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x