Last Updated : 15 Feb, 2017 04:56 PM

 

Published : 15 Feb 2017 04:56 PM
Last Updated : 15 Feb 2017 04:56 PM

கொடூர எஜமானர்களிடம் சிக்கி கடும் சித்ரவதைகள் அனுபவிக்கும் சிறுமிகள்: மியான்மரை உலுக்கும் பயங்கரம்

மியான்மர் நாட்டின் மவ்லாமைன் என்ற நகரில் செல்வந்தர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமியும் இவரது சகோதரியும் அனுபவித்த துன்பங்கள் மியன்மர் நாட்டையே உலுக்கியுள்ளன.

மியான்மர் நாட்டில் நிலவி வரும் கடும் வறுமை காரணமாக சிறுவர் சிறுமிகளை பணக்காரர்கள் வீட்டுக்கு வேலைக்காக அனுப்பி அங்கு அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு சொல்லொணா சித்தரவதைகளுக்கு ஆளாகி வருவது வழக்கமாகி வருகிறது.

மியான்மரில் கல்வியறிவு கிடைக்காத சிறுவர் சிறுமிகள் தெற்கு மியான்மரில் உள்ள செல்வந்தர் வீடுகளில் வேலைக்காரர்களாக சேர்வது வழக்கம், இப்படி லட்சக்கணக்கான சிறுமிகள் அங்கு அவதிப்படுவதாக ஏஜென்சி மற்றும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கின்றன. இவர்களை இதற்காகத் தேர்வு செய்து அனுப்புகிறது ஒரு கேட்டரிங் நிறுவனம்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் மவ்லாமைன் என்ற தெற்கு மியான்மர் நகரில் செல்வந்த முதலாளியம்மாவிடம் 14 வயது சிறுமியும், அவரது சகோதரியும் வேலைக்குச் சேர்ந்தனர்.

ஆனால் ஒரேயொரு ஆரஞ்சு பழம் காணவில்லை என்பதற்காக முதலாளியம்மா சிறுமியின் உடலில் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றியுள்ளார்.

சித்தரவதை அனுபவித்த கின் கின் துன் என்ற அந்தச் சிறுமி கூறும்போது, “என் உடலின் இடது புறம் கொதிக்கும் நீரை ஊற்றினார், உண்மையைச் சொல், ஆரஞ்சுப் பழத்தை எடுத்தாயா என்றார். ஆனால் நான் இல்லை என்றேன் அப்போதும் என்னை தாக்கினார்.

எனக்கு எரிகிறது, எரிகிறது என்று கதறினேன் ஆனால் என் தலையில் அவர் தொடர்ந்து அடித்தார், நிறைய ரத்தம் வெளியேறியது” என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

முதலாளியம்மாவுக்கு வயது 40, கணவனை இழந்தவர், தாயுடன் வசித்து வந்தார். கின் கின் துன் இத்தகைய சித்தரவதைகளை 3 ஆண்டுகளாக அனுபவித்து வந்தார், பிறகு காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது வேறு கதை.

உடல் நலம் குன்றிய தந்தை தனது மருத்துவ செலவுகளுக்காக மகள்கள் இருவரையும் வீட்டு வேலைக்கு அனுப்பினார். முதலில் கின் கின் துன் சென்றார் பிறகு இவரது தங்கை தாஸின் ஆங் என்பவரும் அதே வீட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டார்.

முதலில் கின் கின் துனுக்கு மாதம் 22 டாலர்கள் சம்பளம் தந்துள்ளார் வீட்டு எஜமானி. இதற்கு 17 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால் எந்த தந்தையின் மருத்துவ செலவுக்காக சித்தரவதையை அனுபவித்தாரோ அது நிறைவடையவில்லை, தந்தை இறந்தார். அதன் பிறகு அடி உதை அதிகமானது.

கின் கின் மீது வெந்நீர் ஊற்றியதை நேரில் பார்த்த லா ஷ்வே என்பவர், கூறும்போது, “உடைகளைக் களையச் செய்து வெந்நீரை ஊற்றினார். நான் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது, நான் என்ன செய்ய முடியும்? நான் எதுவும் கூற முடியாது” என்று கண்ணீருடன் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மியான்மரில் செல்வச் செழிப்புடன் வளர்ந்து வரும் நகரங்களில் வீட்டு வேலையில் கடும் துன்பங்களையும் சித்தரவதைகளையும் அனுபவித்து வரும் சிறுமிகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணுக்குத் தெரியாமல், சட்டப்பாதுகாப்பு எதுவுமின்றி இத்தகைய சிறுமிகள் சித்தரவதைக்கு ஆளாகி வருகின்றனர். கேட்க ஆளில்லை என்பதே இதில் மிகப்பெரிய வேதனை என்கிறார் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த ஒருவர்.

யாங்கூனில் தையல் கடையிலிருந்து இரண்டு பதின்ம வயது பணியாட்கள் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கொடூரங்கள் மியான்மரில் அம்பலத்துக்கு வந்தன. மீட்கப்பட்ட இவர்கள் உணவின்றி, உறக்கமின்றி அடி உதையுடன் 5 ஆண்டுகாலம் கழித்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளியானதும் மியான்மர் நாடே அதிர்ச்சியடைந்தது, அதிபர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் தலைவர் ஆங் சன் சு கியி மனித உரிமைகளைக் காப்போம் என்று உறுதியளித்த பிறகும் கூட என்ன நடவடிக்கை இத்தகைய கொடுமைகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டவில்லை என்பதே உண்மை.

கண்காணிப்பு சாத்தியமல்ல:

யாங்கூனில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பைன் உதவித் தலைவர் பியாமல் பிச்சைவாங்சே கூறும்போது, “இத்தகைய சம்பவங்களைக் கண்காணிப்பது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது” என்றார். கல்வியறிவு புகட்டுவதும் வறுமையையும் ஒழிப்பதுதான் இதற்கெல்லாம் தீர்வாகும் என்றார் அவர்.

கின் கின் துன் மற்றும் அவரது சகோதரி இருவரையும் உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் மருத்துவமனையில் சந்தித்த பிறகே இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

சமூக ஆர்வலர் அலுவலகத்தில் கின் கின் துன் துயரத்தை விவரிக்கும் போது, எப்படி திருட்டுப் பழி சுமத்துவார்கள் என்பதையும் கட்டிப்போட்டு எரியும் விறகுக் கட்டையால் சுட்டெரிப்பார்கள் என்பதையும் விளக்கினர்.

சில வேளைகளில் சகோதரிகள் இருவரையும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள வேண்டும் என்று எஜமானி உத்தரவுபோடுவாராம், அதாவது இருவரும் ரத்தம் வரும் வரைக்கும் ஒருவரையொருவர் அடிக்க வேண்டும், அதன் பிறகு காயத்தில் மிளகாய்ப் பொடி, வினீகர் ஆகியவற்றை தடவ வேண்டும்

“நாங்கள் இதனைச் செய்ய மறுத்தால் அவர்கள் இதைச் செய்வார்கள். நாங்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வெறுக்க வேண்டும்” என்றார் கின் கின் துன் கண்ணீர் மல்க.

கடந்த திங்களன்று இந்தக் கொடுமைகளை 3 ஆண்டுகளாக சிறுமிகள் மீது பிரயோகித்த எஜமானி அய் அய் சூ என்பவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார், அவர் மீது உடல் காயம் ஏற்படுத்துமாறு சித்தரவதை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது, ஆனால் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் மறைக்கப்பட்டன.

ஏ.எஃப்.பி. நிருபர்கள் கொடூர எஜமானியை பேட்டி எடுக்க முயன்ற போது அவரும் அவரது தாயாரும் பேச மறுத்தனர்.

இந்தச் சிறுமிகளின் அத்தை லா கியிதான் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது மியான்மரின் மந்தமான, ஊழல் நிரம்பிய சட்ட நடைமுறைகளையும் மீறி தைரியமாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

கோர்ட்டில் எஜமானி முதலில் வெந்நீரை சிறுமியே தன் மீது ஊற்றிக் கொண்டார் அவருக்கு மனநிலை சரியில்லை என்று வாதிட்டனர். ஆனால் சிறுமியின் அத்தை கடுமையான வாதங்களின் மூலம் அதனை உடைத்துள்ளார்.

கடும் சித்தரவதைகளை சிறுவயதில் அனுபவித்து மீண்டுள்ள கின் கின் துன், “என் சகோதரி மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்” என்றார், மேலும் ‘நான் இந்த வயதில் பள்ளிக்குச் செல்ல முடியுமா?’ என்று ஆர்வமுடன் கேட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x