Published : 23 May 2017 11:35 AM
Last Updated : 23 May 2017 11:35 AM
தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரான பிறகு ட்ரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா சென்றார். சவுதி சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இஸ்ரேலுக்குச் சென்றுள்ள ட்ரம்ப் ஜெருசலேமின் பழைய நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கு சுவரில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் இஸ்ரேல் அதிபர் ருவென் ரிவ்லின்னுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் ட்ரம்ப் பேசும்போது, "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி ஏற்பட தற்போது ஏதுவான சூழல் உருவாக்கியுள்ளது" என்றார்.
ஈரான் உதவியில்லாமல் சாத்தியமில்லை
ஈரானின் உதவியில்லாமல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவாது. இப்பிராந்தியத்தில் தீவிரவாதிகளை எதிர்த்து ஈரான் நிற்கிறது என்று ஈரான் அதிபர் ரசான் ஹவ்ரானி கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு பதிலளித்த ட்ரம்ப், "ஈரான் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஒபாமா அதிபராக இருந்தபோது 2015-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்துக்கு பிறகு ஈரான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
ஈரான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க நிதி அளிக்கிறது. சிரியா, இராக், ஏமனில் கிளர்ச்சி ஏற்பட்டதில் ஈரானுக்கு முக்கிய பங்கு உண்டு. ஈரான் அணுஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
பாலஸ்தீன பயணம்
இஸ்ரேல் பயணத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்திக்கிறார் ட்ரம்ப்.
ட்ரம்பின் பாலஸ்தீன பயணம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாச் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT