Published : 27 May 2017 04:03 PM
Last Updated : 27 May 2017 04:03 PM
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தினால் அமெரிக்காவின் பெருளாதார வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ட்ரம்ப், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தும் வந்தார்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக உள்ளது எனவும், அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை இதற்காக செலவழிக்கிறது ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் பங்களிப்பு இதில் ஏதும் இல்லை என குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் குறித்து ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர் கேரி கோன் வெள்ளிக்கிழமை கூறும்போது, "முந்தைய ஒபாமா நிர்வாகத்தால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் முடக்கம் ஏற்பட்டதை நாம் அறிவோம். அதிபர் ட்ரம்ப் நாடு திரும்பியவுடன் பாரீஸ் ஒப்பந்தம் தொடர்பாக தனது முடிவை வெளியிட இருக்கிறார்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் குறித்து ஜி7 நாடுகளின் தலைவர்களின் கருத்தை கேட்கவும் அவர் ஆர்வமாக இருக்கிறார். அவர்களுடனான உரையாடல் ஆக்கபூர்வமான விவாதமாக இருந்திருக்கும். ஏனெனில் நம்முடன் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அதிபர்கள் உள்ளனர்.
அதிபர் ட்ரம்ப் சுற்றுச்சூழல் குறித்து மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார். சுற்றுச் சூழலுக்கு நலன் பயக்கும் செயல்களை செய்ய விரும்புகிறார். அத்துடன் சேர்த்து அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அவர் விரும்புகிறார்" என்றார்.
அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது கரியமிலவாயு வெளியீட்டில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் இருந்தது. மேலும் கரியமில வாயு அளவை 2005-ம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுக்குள் 25% முதல் 28%வரை குறைக்கப்படும் என்று ஒபாமா அரசு உறுதியும் அளித்தது.
196 நாடுகள் உள்ள பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க விலகுவது என்பது அந்நாட்டின் பருவநிலை சார்ந்த ராஜ தந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT