Last Updated : 20 Nov, 2014 09:29 AM

 

Published : 20 Nov 2014 09:29 AM
Last Updated : 20 Nov 2014 09:29 AM

போதை பொருள் கடத்தலில் 11 வயது சிறுமி

கொலம்பியாவில் போதை பொருள் கடத்தல் வழக்கில் 11 வயது சிறுமியை போலீஸார் கைது செய்தனர். கொலம்பியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சுமார் அரைக்கிலோ போதை பொருளை கடத்திச் செல்வதற்கு அச்சிறுமி பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

இந்தச் சிறுமியின் பெற்றோர் பிரிந்து வாழ்கின்றனர். விடுமுறைக்காக தன் தந்தையிடம் சென்று வந்ததில் இருந்து சிறுமி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் எனவும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது தாய் கூறினார்.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த போது அவரின் வயிற்றில் 104 கேப்ஸூல் மாத்திரைகள் இருந்தன. சோதனையில் அவற்றில் போதைப் பொருள் நிரப்பட்டிருப்ப‌து தெரியவந்தது. உடனே அந்தச் சிறுமியை போலீஸார் கைது செய்தனர். அவை என்னவகையான போதை மருந்து என்பதை அறியும் சோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாக போலீஸார் கூறினர். மேலும் அந்தச் சிறுமியின் தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.

மரியா ஃபுல் ஆஃப் கிரேஸ்

கொலம்பியாவில் சிறுமிகளையும், பெண்களையும் வைத்து போதைப் பொருள் கடத்தப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இது போன்ற சம்பவங்களை மையமாக வைத்து 2004-ம் ஆண்டில் “மரியா புல் ஆப் கிரேஸ்” என்ற திரைப்படம் வெளியாகி, சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்தது.

அத்திரைப்படத்தில் நாயகியான 17 வயது மரியா, வறுமையின் காரணமாக கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருளை கடத்த முடிவெடுப்பார். கர்ப்பிணியான அவர் கடத்தல்காரர்கள் தரும் ஹெராயின் அடங்கிய 62 பெரிய கேப்ஸுல்களை விழுங்கிவிட்டு விமானம் மூலம் அமெரிக்கா செல்வார். அவருடன் இதேபாணியில் போதைப்பொருள் கடத்தும் நண்பர்களும் சேர்ந்து கொள்வார்கள்.

ஹோட்டலில் தங்கியிருக்கும்போது மரியாவின் தோழி லூசியின் வயிற்றில் இருக்கும் கேப்ஸுல் வெடித்து, உயிரிழப்பார். இதையடுத்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அப்பெண்ணின் வயிற்றை கிழித்து மீதமுள்ள போதைப்பொருளை எடுப்பார்கள். இதுபோன்ற போதைமருந்து கடத்தலில் உள்ள பல கொடூரங்களும், அதனை கடத்தும் பெண்களின் நிலையையும் அத்திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x