Published : 16 Nov 2013 09:10 AM
Last Updated : 16 Nov 2013 09:10 AM
நான் மிகச் சிறந்த அதிபர் இல்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அதிபர் ஒபாமாவின் கனவுத் திட்டமான ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு பாலிசி அக்டோபரில் அறிமுகமானது. புதிய காப்பீடு திட்டம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இத்திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் 36 மாகாணங்களில் இதுவரை 27,000 பேர் மட்டுமே ஒபாமா கேர் திட்டத்தில் முறையாகப் பதிவு செய்துள்ளனர். மேலும் 79,000 பேர் மாகாண அரசுகள் மூலம் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள், ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையவில்லை. இந்நிலையில், ஏற்கனவே உள்ள பழைய மருத்துவக் காப்பீடுகள் காலாவதியாவதாக அந்தந்த காப்பீட்டு நிறுவனங்கள் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.
இதன்காரணமாக அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிபர் ஒபாமா நீண்ட நேரம் பேட்டியளித்தார்.
அப்போது, பொதுமக்கள் விரும்பினால் பழைய மருத்துவக் காப்பீடுகளை ஓராண்டுக்கு நீட்டித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார். அவர் மேலும் கூறியது:
என்னுடைய அதிபர் பதவிக் காலத்தில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதே என்னைப் பற்றி நான் தெளிவாக கூறியிருக்கிறேன். நான் மிகச் சிறந்த மனிதன் இல்லை. எனவே, நான் மிகச் சிறந்த அதிபராகவும் இருக்க முடியாது.
எனினும் அமெரிக்க மக்களுக்காக நான் கடுமையாக உழைக்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் அமெரிக்க மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் எழுகிறேன். சில நேரங்களில் நிர்வாக நடைமுறை சிக்கல்களால் பல்வேறு சிரமங்களை மக்கள் சந்திக்கிறார்கள்.
மருத்துவக் காப்பீடு திட்டம் என்பது இணையதளத்தில் இசை ஆல்பங்களை வாங்குவது போல் சுலபமானது அல்ல. அதில் பல்வேறு நடைமுறைகள் உள்ளன. ஒபாமா கேர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்படும்.
இந்த விவகாரத்தால் பொதுமக்கள் மத்தியில் இழந்துள்ள செல்வாக்கை மீண்டும் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ஒபாமா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT