Published : 06 Sep 2016 01:07 PM
Last Updated : 06 Sep 2016 01:07 PM
’ நான் இந்திய - ஜப்பானிய பந்தம் கொண்டவள்தான். என் தந்தை ஓர் இந்தியர். அதற்காக பெருமை கொள்கிறேன். என்னுள் இந்திய ரத்தம் இருப்பது குறித்தும் பெருமைப்படுகிறேன்’.
இந்திய- ஜப்பானிய இளம்பெண் பிரியங்கா யோஷிகாவா கடும் போராட்டங்களுக்குப் பிறகு, ஜப்பானிய அழகியாக திங்கள்கிழமை முடிசூட்டப்பட்டார். அப்போது, இந்திய ரத்தம் தன்னுள் கலந்திருக்கிறது குறித்துப் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
தந்தை இந்தியர்; தாய் ஜப்பானியர் என்பதால் ஜப்பானில் நடந்த அழகிப்போட்டியில் கலந்துகொண்ட 22 வயது பிரியங்கா யோஷிகாவாவுக்கு எதிராக குரல்கள் எழுந்தன. மிஸ் ஜப்பான் அழகி, முழு ஜப்பானியராக இருக்கவேண்டும்; பாதியாக அல்ல என்றும் கூறப்பட்டது.
பிரியங்காவின் கண்ணீருக்குப் பின்னாலான வெற்றி, ஜப்பானின் முதல் கருப்பின அழகியாக அரியானா மியாமோட்டோ முடிசூட்டப்பட்டு சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு கிடைத்திருக்கிறது.
மியாமோட்டோவின் வெற்றிக்குப் பிறகு அடுத்த மிஸ் ஜப்பான், முழு ஜப்பானியராகவே இருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் எதிர்ப்புக்குரல்கள் கிளம்பின. ஆனால் அவரின் வெற்றி, மற்ற கலப்பின பெண்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது.
நாங்கள் ஜப்பானியர்கள்
பிரியங்கா யோஷிகாவா இந்திய தந்தைக்கும் ஜப்பானிய தாய்க்கும் டோக்கியோவில் பிறந்தவர். கலவை இனத்தைச் சேர்ந்தவர் என்ற பாகுபாட்டை சிறு வயதில் இருந்தே அதிகம் சந்தித்தார் பிரியங்கா. ஆனால் ஜப்பான் அழகிப்பட்டம் பெற்ற பிறகு அவர் பல் இன சமூகத்தைப் பெருமைப்படுத்தி உள்ளதாகப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இது குறித்துப் பேசிய பிரியங்கா யோஷிகாவா, ''நாங்கள் ஜப்பானியர்கள். ஆம் நான் இந்திய - ஜப்பானிய கலவைதான். என்னுடைய தூய்மை குறித்துப் பேசுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் தந்தை ஓர் இந்தியர். அதற்காக பெருமை கொள்கிறேன். என்னுள் இந்திய ரத்தம் இருப்பது குறித்தும் பெருமைப்படுகிறேன். ஆனால் அதற்காக நான் ஜப்பானியர் இல்லை என்று கூறவில்லை'' என்று கூறினார்.
மியாமோட்டோவைப் போலவே, பிரியங்காவும் தன்னுடைய தோல் நிறத்துக்காகத் தொடர்ந்து கேலி செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT