Published : 13 Feb 2014 01:14 PM
Last Updated : 13 Feb 2014 01:14 PM

பிரிட்டனும் பிரான்ஸும் எனது மகள்களைப் போல...: பிரான்ஸ் அதிபருக்கு அளித்த விருந்தில் ஒபாமா பேட்டி

பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய இரு நட்பு நாடுகளில் மிகவும் பிடித்த நாடு எதுவென்று என்னால் பாகுபடுத்தி பார்க்க முடியாது, ஏனென்றால் இரு நாடுகளையும் எனது இரு மகள்களைப் போலவே கருதுகிறேன் என்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

அமெரிக்காவுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள பிரான்ஸ் அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்துக்கு வெள்ளை மாளிகையில் ஒபாமா செவ்வாய்க்கிழமை விருந்தளித்து கௌரவித்தார். விருந்து தொடங் கும் முன் இருவரும் கூட்டாக நிருபர்களிடம் பேசினர்.

அப்போது பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நெருங்கிய நட்பு நாடுகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த நாடு எது என்று ஒபாமாவிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு ஒபாமா, “எனக்கு 2 மகள்கள். இருவரும் திறமைசாலிகள், அற்புதமானவர்கள். அவர்களை நான் பாகுபடுத்தி பார்த்ததில்லை. இவர்களைப் போலவே இவ்விரு ஐரோப்பிய கூட்டாளிகளையும் பார்க்கிறேன்” என்றார்.

ஒபாமா மேலும் கூறுகையில், “பிரான்ஸ் நாட்டுடனான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவாக உள்ளது” என்றார். அருகில் இருந்த பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் கூறுகையில், “எந்தவொரு நாட்டுக்கும் மிகவும் பிடித்த நாடாக இருக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால் அமெரிக்கா பிரான்ஸ் இடையிலான உறவு வரலாற்று ரீதியிலானது. பல்வேறு பிரச்சினை களில் இரு நாடுகளுக் கும் ஒருமித்த கருத்து உள்ளது” என்றார்.

சிரியா விவகாரம்

சிரியாவில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய அந்நாட்டு அரசு மறுத்துவரும் நிலையில், அந்நாட்டுக்கு எதிராக தடை விதிக்கும் வகையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவர மேலை நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷியாவை ஒபாமா கடுமையாக குறை கூறினார்.

“சிரியாவில் லட்சக்கணக்கான மக்கள் மனிதாபிமான உதவிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் ரஷியா தனது எதிர்ப்பை கைவிட வேண்டும்” என்றார் அவர்.

உளவு விவகாரம்

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான என்ஐஏ-வின் உளவு நடவடிக்கைகள் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ஒபாமா கூறுகையில், “உளவுத் தகவல்களை சேகரிக்கும் போது தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான உரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது. உளவு நடவடிக்கை மேற்கொள்ளமாட்டோம் என அமெரிக்கா எந்த நாட்டுடனும் உடன்பாடு காணவில்லை” என்றார்.

ஈரான் மீதான பொருளாதார தடைகள் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படாத நிலையில், பிரான்ஸ் நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் 100-க்கும் மேற்பட்டோர் கடந்த வாரம் ஈரான் சென்று அங்கு தொழில் வாய்ப்புகளை ஆராய்ந்தனர். இந்த நிறுவனங்களுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

“ஈரான் மீதான தடைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஈரான் மீது புதிய தடைகள் விதிப்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. எனினும் ஈரானுடன் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வி அடையுமா னால் பொருளாதார தடைகள் மேலும் கடுமையாக்கப்படும்” என்றார்.

2 அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கும் அழைப்பு

அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்றபின் ஒபாமா அளிக்கும் முதல் அரசுமுறை விருந்து இதுவாகும். இவ்விருந்தில், இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ஷெபாலி துக்கல் மற்றும் ஆஷிதா ராஜி ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜனநாயக தேசியக் குழுவின் (டிஎன்சி) தேசிய நிதிக் குழு உறுப்பினராகவும், டிஎன்சி பெண்கள் தலைமைப்பண்பு கூட்டமைப்பின் இணைத் தலைவராகவும் துக்கல் உள்ளார். வெள்ளை மாளிகை மகளிர் குழுவிலும், ரெடி பார் ஹிலாரி பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டியின் இணைத் தலை வராகவும் துக்கல் இருந்து வருகிறார். வெள்ளை மாளிகை நிதியுதவித் திட்டங்களின் அதிபர் குழு உறுப்பினராக ஆஷிதா ராஜி உள்ளார்.

இவ்விருந்தில் அதிபர் ஒபாமாவின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள், முக்கியப் பொறுப்பிலுள்ளவர்கள், எம்.பி.க்கள், ஹொலாந்த் தலைமை யிலான பிரான்ஸ் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஒபாமா அவரது மனைவி மிஷெல் இருவரும் விருந்து மாளிகையின் முன் வாயிலில் நின்று பிரான்ஷுவா ஹொலாந்தை வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x