Published : 15 Nov 2014 09:43 AM
Last Updated : 15 Nov 2014 09:43 AM
ஐ.எஸ். ஜிகாதிகள் எரிமலையாக வெடித்துச் சிதற வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அழைப்பு விடுத்துள்ளார்.
இராக்கில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) அமைப்பு தலைநகர் பாக்தாதை நோக்கி முன்னேறி வருகிறது. அந்த அமைப்புக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் அபுபக்கர் அல்-பாக்தாதி உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயம் அடைந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல்களை அமெரிக்க தரப்பு உறுதி செய்யவில்லை.
புதிய வீடியோ வெளியீடு
இந்நிலையில் அபுபக்கர் அல்-பாக்தாதியின் புதிய வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 17 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:
உலகம் முழுவதும் இருந்து ஐ.எஸ். அமைப்பில் பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் இணைய வேண்டும். ஒவ்வொரு வீரரும் எரிமலையாக வெடித்துச் சிதற வேண்டும். இருள் அடைந்துள்ள இந்த பூமியில் நீங்கள் நெருப்பால் ஒளியேற்ற வேண்டும். நமது வலிமையைப் பார்த்து அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் அச்சமடைந்துள்ளன, அவர்களின் படை வலுவிழந்து பலவீனமாகக் காணப்படுகிறது.
ஐ.எஸ். படை வீரர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். நமது படையில் ஒரு வீரர் உயிரோடு இருக்கும் வரை ஜிகாதி யுத்தம் ஓயாது. நாம் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை குவிப்போம் என்று அல்-பாக்தாதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கருத்து
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியபோது, வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இப்போதைக்கு எதுவும் தெரியவில்லை, அல்-பாக்தாதியின் பேச்சில் புதிதாக எதுவும் இல்லை. வழக்கம்போல் அவர் காட்டு மிராண்டித்தனமாக பேசியிருக்கிறார் என்று தெரிவித்தார்.
அபுபக்கர் அல்-பாக்தாதியை பிடிக்க துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.60 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT