Published : 27 Mar 2014 10:29 AM
Last Updated : 27 Mar 2014 10:29 AM
அமெரிக்க வாழ் இந்தியரான ரஜத் குப்தாவுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனை சரியானது என்று அமெரிக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. தன்மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்குமாறு ரஜத் குப்தா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்கு நராக இருந்தவர் ரஜத் குப்தா. இவர் மெக்கின்சி நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரராகவும் இருந்தார். 65 வயதாகும் இவர் உள்பேர வணிகத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு 2012-ம் ஆண்டில் இவருக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப் பட்டது.
2008-ம் ஆண்டு பங்குச் சந்தை வர்த்தகத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஜத் குப்தா மீது 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையில் அக்டோபர் மாதம் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. 50 லட்சம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அவரது மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யும்வரை கைது செய்யப்பட மாட்டார் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்
மூன்று பேரடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் முன்பு ரஜத் குப்தாவின் மனு விசாரணைக்கு வந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என ரஜத் குப்தா தாக்கல் செய்த விவரங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றும், முந்தைய நீதிபதி ஜெட் ராக்காஃப் அளித்த தீர்ப்பு சரியானதே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பங்குச் சந்தை வர்த்தகத்தில் முறைகேடாக நடந்து கொண்டது, ரகசியங்களை வெளியிட்டது ஆகிய குற்றங்களை ரஜத் குப்தா புரிந்துள்ளது நிரூபிக்கப்பட் டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித் தனர். மெக்கின்சி அண்ட் கோ தலைவராக ரஜத் குப்தா இருந்தபோது 2008-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தில் தொழிலதிபர் வாரன் பஃபெட் 500 கோடி டாலர் முதலீடு செய்வது தொடர்பான தகவலை அவரது நண்பர் ராஜ் ராஜரத்தினத்துக்கு தெரிவித்துள்ளார்.
வாரன் பஃபெட் முதலீடு செய்வது குறித்த அறிவிப்பை பங்குச் சந்தை வர்த்தகம் முடிந்த பிறகு அதாவது மாலை 4 மணிக்குப் பிறகு வெளியிடுவதென கோல்ட்மென் சாக்ஸ் நிறுவன இயக்குநர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இயக்குநர் கூட்டம் நடைபெற்றபோதே, ராஜரத்தினத்துக்கு தொலைபேசி மூலம் ரஜத் குப்தா தெரிவித் துள்ளார். இதனால் அவர் கோல்ட்மன் சாக்ஸ் நிறுவன பங்குளை வர்த்தகம் முடிவடைய 5 நிமிஷம் இருக்கும்போது வாங்கினார். சுமார் 2 லட்சம் பங்குளை அவர் வாங்கியது தெரியவந்தது. வாரன் பஃபெட் முதலீடு குறித்த அறிவிப்பு வெளியான மறுநாளே கோல்ட்மேன் சாஷ் பங்கு விலைகள் 7 சதவீதம் உயர்ந்தன.
2008-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி கோல்ட்மேன் சாஷ் நிறுவனம் தனது இயக்குநர் குழு கூட்டத்தில் நஷ்டம் குறித்த தகவலை வெளியிட முடிவு செய்தது. இந்த விஷயமும் ராஜரத்தினத்துக்கு குப்தா மூலம் தெரியவந்தது. இதையடுத்து அக்டோபர் 24-ம் தேதி பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும் தன் வசம் இருந்த பங்குகளை அரை மணி நேர இடைவெளியில் விற்பனை செய்துள்ளார் ராஜரத்தினம்.
இதனால் பங்கு விலைகள் சரிந்து 38 லட்சம் டாலர் அளவுக்கு ஏற்படவிருந்த நஷ்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ரஜத் குப்தாவின் மேல் முறையீட்டு மனு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் ரஜத் குப்தாவுக்கும், ராஜ் ராஜரத்தினத்துக்கும் இடையி லான உறவு, ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட விஷயங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக சுட்டிக் காட்டினர்.
2005-ம் ஆண்டு ரஜத் குப்தாவும், ராஜ் ராஜரத்தினமும் சேர்ந்து வாயேஜர் கேபிடல் பார்ட்டனர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதில் ரஜத் குப்தா 50 லட்சம் டாலர் முதலீடு செய்ததையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். 2007-ம் ஆண்டு இவர்களிருவரும் சேர்ந்து மற்ற இரண்டு பேரை கூட்டாளிகளாகக் கொண்ட நியூ சில்க் ரூட் எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கு குப்தா தலைவராக இருந்துள்ளார் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ரஜத் குப்தா மீதான குற்றச்சாட் டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் கூறி, மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தனர். ராஜ் ராஜரத்தினத்துக்கு ஹெட்ஜ் ஃபண்ட் முறைகேடு தொடர்பான வழக்கில் 11 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது செயலுக்கு மிகவும் வருந்துவதாக தீர்ப்புக்குப் பிறகு ரஜத் குப்தா தெரிவித்தார். வாழ்நாள் முழுவதும் தான் கட்டிக் காப்பாற்றிவந்த நம்பகத் தன்மையை இதனால் இழந்து விட்டதாக அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT