Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையினரின் எண்ணிக்கையை இரு மடங்காக்க பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, தெற்கு சூடானில் தற்போதுள்ள ஐ.நா. அமைதிப் படையினரின் எண்ணிக்கையை 7 ஆயிரத்தில் இருந்து கிட்டத்தட்ட 14 ஆயிரமாக உயர்த்த பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
படையினரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பிறகு அதில் ராணுவ வீரர்கள் 12,500 பேரும், போலீஸார் 1,323 பேரும் இடம் பெறுவார்கள். காங்கோ உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஐ.நா. அமைதிப்படையின் வீரர்களை மாற்றுவதன் மூலம் இந்தப் படையை வலுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு படை பலத்தை பயன்படுத்த அதிகாரமளிக்கும், ஐ.நா. சாசனம், அத்தியாயம் 7ன் கீழ் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தெற்கு சூடானில் இரு பிரிவினரும் மோதலை கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஐ.நா. முகாம் மற்றும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு சூடானில், ஜோங்லி மாநிலம், அகோபோ என்ற இடத்தில் உள்ள ஐ.நா. முகாம் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது.இதில் அமைதிப் படையில் பணியாற்றிய 2 இந்திய வீரர்கள் இறந்தனர். ஒருவர் காயமடைந்தார். சுமார் 20 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் இருந்து பிரிந்து 2011ல் தனி நாடாக உருவெடுத்த தெற்கு சூடானில், கடந்த 15ம் தேதி உள்நாட்டுப் போர் வெடித்தது. அதிபர் சல்வா கீருக்கும், பதவிநீக்கம் செய்யப்பட்ட துணை அதிபர் ரீக் மச்சாருக்கும் ஏற பட்டுள்ள அதிகாரப் போட்டியால் இந்த சண்டை ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர் என்பதால் இது இனச் சண்டையாகவும் மாறியுள்ளது.
இதில் இதுவரை நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண, அதிபர் சல்வா கீரும், முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சாரும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கருத்து முரண்பாடுகளுக்காக வன்முறை யில் இறங்குவதை நியாயப்படுத்த முடியாது. பிரச்சினைக்கு ஆயுதம் மூலம் தீர்வுகாண முடியாது. அப்பாவி பொதுமக்களை பாது-காக்கும் பணியில் ஐ.நா. அமைதிப் படை தொடர்ந்து ஈடுபடும்” என்று பான் கி மூன் கூறியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT