Published : 14 Dec 2013 09:36 AM
Last Updated : 14 Dec 2013 09:36 AM

போற்குற்றவாளி முல்லாவை தூக்கில் போட்டதால் வங்கதேசத்தில் வன்முறை: 4 பேர் பலி

போர்க்குற்றத்துக்காக ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் உயர் தலைவர் அப்துல் காதர் முல்லாவுக்கு (65) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுதொடர்பான வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வன்முறைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.

வியாழக்கிழமை இரவு தூக்கிலிடப்பட்ட முல்லாவின் உடல், இறுதிச்சடங்கு நடத்திய பிறகு பரித்பூர் மாவட்டம் அமிராபாத் கிராமத்தில் உள்ள அவரது குடும்ப இடுகாட்டில் அதிகாலை 4.20 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. இதைக் கண்காணித்தவரும் மாவட்ட ஆட்சியருமான முகமது மமுன் ஷிப்லீ இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து, ஜமாத் அமைப்பினரும் அதன் மாணவர் பிரிவினரும் சத்ரா ஷிபிர் பகுதியில் ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடித்து நொறுக்கினர். இந்தத் தகவலை சத்கிரா பகுதி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜாய்பெப் சவுத்ரி தெரிவித்தார்.

இதுதவிர பல்வேறு பகுதிகளில் ஜமாத் ஆதரவாளர்கள் பேரணி நடத்தியதுடன் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீஸார் கூட்டத்தைக் கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இந்த வன்முறைக்கு 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய பந்த்துக்கு ஜமாத் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி முல்லா தாக்கல் செய்திருந்து மறு ஆய்வு மனுவை வங்கதேச உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் 1971ல் நடை பெற்ற விடுதலைப்போரின்போது பாகிஸ்தான் படைகளுடன் கை கோத்து அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இழைத்த கொடிய குற்றங்களுக்காக முல்லாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அமைதி காக்க வேண்டும்: அமெரிக்கா

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், "முல்லாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் வன்முறையில் ஈடு படாமல் அமைதியான முறையில் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

இந்தியா ஆதரவளிக்க வேண்டும்

முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சித் (பிஎன்பி) தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வங்கதேசத்தில் நிலவும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு அளித்து வரும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட அரசுகளுக்கு நன்றி. ஐ.நா. பொதுச்செயலாளரின் முயற்சிக்கும் நன்றி.

மற்ற நாடுகளைப் போல இங்கு உள்ள பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் பக்கத்து நாடான இந்தியாவும் அந்நாட்டு மக்களும் மதிப்பளித்து ஆதரவு அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஜனவரி 5-ல் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்துவதற்காக ஆளும் அவாமி லீக் கட்சி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசை கடந்த மாதம் அமைத்தது. ஆனால், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, கட்சி சாரதவர்கள் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அப்போதுதான் தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என அவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x