Published : 24 Jan 2017 06:00 PM
Last Updated : 24 Jan 2017 06:00 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்ஸிட்) தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உட்பட 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூனில் அந்த நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள், வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 48 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று வாக்களித்தனர்.
இந்த விவகாரத்தால் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே கடந்த ஜூலையில் பதவியேற்றார். வரும் மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறிவிடும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது, பிரெக்ஸிட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பெண் தொழிலதிபர் ஜினா மில்லர் பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் 8 நீதிபதிகள், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை, இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இதர 3 நீதிபதிகள், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினர்.
பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுவது பிரதமர் தெரசா மேவுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT