Published : 06 Sep 2016 03:46 PM
Last Updated : 06 Sep 2016 03:46 PM
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், ஒபாமா குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், போதை மருந்து வலைப்பின்னலை அழிப்பதாக சபதம் மேற்கொண்டு கடுமையான நடவடிக்கைகளில் சில ஜனநாயக முறைகளற்ற விதத்தில் சட்டவிரோத கொலைகள், என்கவுண்டர்களுக்கு உத்தரவிட்டவர். இது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் 30-ம் தேதி ரோட்ரிகோ அதிபராக பதவியேற்றது முதல் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் லாவோசில் நடைபெறும் மண்டல உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை ரோட்ரிகோ சந்திப்பதாக இருந்தது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் பிலிப்பைன்ஸ் அதிபரிடம் கேட்ட போது, “போதை மருந்து வலைப்பின்னலை ஒழிப்பதில் நடைபெறும் சட்ட விரோதக் கொலைகளை எப்படி ஒபாமாவிடம் விவாதிப்பீர்கள், எப்படி விளக்குவீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு கோபாவேசப்பட்ட ரோட்ரிகோ, “இறையாண்மை பொருந்திய நாட்டின் அதிபர் நான். நாம் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு நீண்ட காலம் ஆகிவிட்டது. பிலிப்பைன்ஸ் மக்களைத் தவிர எனக்கு வேறு ஒருவரும் ஆண்டானாக முடியாது. நீங்கள் மரியாதையைக் கடைபிடிக்க வேண்டும். கேள்வி என்ற பெயரில் சும்மா எதையாவது கேட்டு வைக்காதீர்கள்” என்று சாடிய அதிபர் ரோட்ரிகோ, மேலும் போப் மற்றும் ஐநா. செயலர் பான் கி மூன் ஆகியோர் மீது வசை பொழிந்தார்.
பிறகு, “என்னை கேள்வி கேட்க இந்த ஒபாமா யார்? பிலிப்பைன்சை காலனியாதிக்கம் செய்து சுரண்டியதற்கு அமெரிக்கா இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை” என்று கடுமையாக சாடினார்.
இதனையடுத்து இன்று தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்து பல்டி அடித்த ரோட்ரிகோ, “பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கடுமையாக பதில் அளித்தது கவலையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் மீதான தனிநபர் தாக்குதல் கருத்திற்கு வருந்துகிறோம்” என்றார்.
ஆனால் இது மன்னிப்பல்ல, வெறும் வருத்தம் மட்டுமே என்பதாலோ என்னவோ ஒபாமா, லாவோஸில் பிலிப்பைன்ஸ் அதிபரைச் சந்திப்பது குறித்து ஒன்றுக்கு இரண்டு முறை பரிசீலிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT