Published : 13 Jan 2014 11:06 AM
Last Updated : 13 Jan 2014 11:06 AM
இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோனின் உடல், அவரது மனைவியின் கல்லறை அருகே திங்கள்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.
இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் (85) நேற்று முன் தினம் மரணமடைந்தார். கடந்த 8 ஆண்டுகளாக அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி டெல் அவிவ் அருகேயுள்ள மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு சனிக்கிழமை அவர் காலமானார்.
பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் இஸ்ரேல் நாடாளுமன்ற கட்டிடமான நெஸ்ஸட்டில் வைக் கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு நெகேவ் சிகாமோர் ரஞ்ச் பகுதியில் அனமோனஸ் மலைப்பகுதியில் உள்ள ஷரோனின் மனைவி வில்லியின் கல்லறை அருகே அவரது உடல் திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என, நாடாளுமன்ற சடங்குகள் குழு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என குழுவின் தலைவரும் அமைச்சருமான லிமோர் லிவ்நட் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இறுதிச் சடங்கு அரசால் மேற்கொள்ளப்படும். இறுதிச் சடங்கின்போது, இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ், பிரதமர் பெஞ்சமின் நெதான் யாகு, நாடாளுமன்றத் தலைவர் யூலி எட்லஸ்டெய்ன், ஷாரோனின் இரு மகன்கள் ஓம்ரி மற்றும் கிலாத், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோர் சிற்றுரை ஆற்றுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது” என்றார் அவர்.
ஷரோனின் இறுதிச் சடங்கில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லவ்ரோவ் பங்கேற்பார் எனத் தெரிகிறது.இறுதிச் சடங்கின் போது, ஷரோனின் உடலை, ராணுவ ஜெனரல்கள் 6 பேர் சுமந்து செல்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் 11 வது பிரதமரான ஷரோன் 2001 முதல் 2006 -ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். அதற்கு முன்பு வெளியுறவு, பாதுகாப்பு உள்பட 5 துறைகளில் அமைச்சராக இருந்து இஸ்ரேலின் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இதனால் “மிஸ்டர். செக்யூரிட்டி” என்றும் அழைக்கப்பட்டார். இஸ்ரேல்-இந்தியாவுக்கு இடையில் தூதரக உறவுகள் ஏற்பட்ட பின் 11 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வந்த முதல் இஸ்ரேல் பிரதமர் ஷரோன் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT