Published : 07 Oct 2014 03:24 PM
Last Updated : 07 Oct 2014 03:24 PM
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது உடலில் கிட்டத்தட்ட 140 கிலோ எடை கொண்ட சங்கிலி கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாக சிஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சிஐஏ இயக்குநரும், அமெரிக்க பாதுகாப்பு செயலருமான லியோன் பனேடா, சமீபத்தில் அமெரிக்க போர்கள் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
அதில், அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின் லேடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட பிறகு, எவ்வாறு அவரது உடல் கடலில் வீசப்பட்டது என்பதை விவரித்துள்ளார்.
"சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ஒசாமாவின் உடல் கார்ல் வில்சன் போர்க் கப்பலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டு, அரேபிய மொழியில் அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, ஒரு கனமான பைக்குள் உடல் வைக்கப்பட்டது.
உடல் ஒழுங்காக மூழ்க வேண்டும் என்று 140 கிலோ (300 பவுண்ட்) எடையிலான சங்கிலியும் அந்த பையோடு இணைக்கப்பட்டது. ஒரு மேஜையில் உடல் வைக்கப்பட்டு, அந்த மேஜை கப்பலின் மேலடுக்கில் தடுப்புகளுக்கு பக்கத்தில் வைக்கப்படது. மேஜையை சாய்த்து உடலை கடலில் தள்ளும்போது, இருந்த எடையில் அந்த மேஜையும் கடலுக்குள் விழுந்துவிட்டது. உடல் மூழ்கிய பிறகு மேஜை கடல் பரப்பில் மேலே மிதந்தது" என்று லியோன் விவரித்துள்ளார்.
பின்லேடனின் உடல் எந்தக் கடலில், எந்தக் குறிப்பிட்ட இடத்தில் மூழ்கடிக்கப்பட்டது என்ற விவரங்கள் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT