Published : 04 Nov 2013 11:43 AM
Last Updated : 04 Nov 2013 11:43 AM
வங்கதேச விடுதலைப் போரின்போது 18 பேரை படுகொலை செய்ததாக பிரிட்டனை சேர்ந்த இஸ்லாமிய தலைவர் செளத்ரி மியூனுதீன், அமெரிக்காவைச் சேர்ந்த அஸ்ரப்ஜமான் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
அன்றைய கிழக்கு பாகிஸ்தா னில் விடுதலைப் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியபோது பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டன. இதில் சுமார் 30 லட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும் 2 லட்சம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான அல்-பதார் என்ற இயக்கத்தின் முன்னணி தலைவர்களாகச் செயல்பட்ட செளத்ரி மியூனுதீனும் அஸ்ரப்ஜமானும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களைக் குறிவைத்து கொலை செய்தனர்.
இருவரும் சேர்ந்து 1971 டிசம்பர் மாதத்தில் 9 பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், 6 பத்திரிகையாளர்கள், 3 டாக்டர்களை கடத்தி படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் இந்திய ராணுவ உதவியுடன் வங்கதேசம் விடுதலையடைந்து புதிய நாடு உருவானபோது அல்-பதர் அமைப்பின் முக்கிய தலைவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, வடஅமெரிக்க நாடுகளுக்குத் தப்பியோடிவிட்டனர்.
செளத்ரி மியூனுதீன் லண்டனி லும் அஸ்ரப்ஜமான் கான் அமெரிக்கா வின் நியூயார்க் நகரிலும் குடியேறி அங்கேயே நிரந்தர குடியுரிமையும் பெற்றுவிட்டனர்.
அவர்கள் வெளிநாடுகளில் வசித்தாலும் இருவர் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்குகள் வங்கதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் விசாரணையைத் தீவிரப்படுத்த 2010-ம் ஆண்டில் 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பாயத்தில் செளத்ரி மியூனிதீன், அஸ்ரப்ஜமான் ஆகியோர் மீது நடைபெற்ற விசாரணை அண்மையில் நிறைவடைந்தது. இருவரும் சேர்ந்து 18 பேரை படுகொலை செய்தது ஆதாரங்களுடன் நிரூபணமானதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி பைதுல் ஹசன் அறிவித்தார்.
குற்றம் நடைபெற்று சுமார் 42 ஆண்டுகளுக்குப் பின் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செளத்ரி மியூனுதீன் இப்போது பிரிட்டனின் இஸ்லாமிய மதத் தலைவராக உள்ளார். அங்கு முஸ்லிம் கவுன்சில் ஏற்படுத்தியவர்களில் இவரும் முக்கியமானவர்.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், வங்கதேசப் பிரிவினையை நான் எதிர்த்தது உண்மைதான், ஆனால் எந்த வகையான குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் அஸ்ரப்ஜமான், தீர்ப்பு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இருவரையும் வங்கதேசம் கொண்டுவந்து தண்டனையை நிறைவேற்ற அந்த நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை பிற நாடுகளிடம் பிரிட்டன் ஒப்படைக்காது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவும் இதே கொள்கையை கடைப்பிடிக்கிறது. எனவே, இருவரையும் வங்கதேசம் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.
போர்க்குற்ற தீர்ப்பாயம் இதுவரை 10 பேருக்கு தண்டனை அறிவித்துள்ளது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேசத்தின் பிரதான கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டபோது கலவரம் வெடித்து சுமார் 150 பேர் வரை உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT