Published : 07 Sep 2016 04:21 PM
Last Updated : 07 Sep 2016 04:21 PM
உலகம் முழுவதிலும் சுமார் 50 மில்லியன் குழந்தைகள் போர், வன்முறை மற்றும் துன்புறுத்தல்களால் தங்கள் தாய்நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் அவசர கால நிதியத்தின் நிர்வாக இயக்குநர் ஆண்டனி லேக்,
''அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவனின் உடல் கரையில் ஒதுங்கிக்கிடந்தது. ஐந்து வயதான சிறுவன் ஒம்ரான் டாக்னீஷ் சிரிய போரால் தரைமட்டமான தனது வீட்டிலிருந்து மீட்புப் படையினரால் வெளியே கொண்டு வரப்பட்டான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தூசி படிந்த உடலோடு, தலையில் ரத்தக்காயங்களுடன் அச்சிறுவன் குழுப்பமான மனநிலையில் அமர்ந்திருக்கிறான். இந்த இரண்டு காட்சிகளும் உலகத்தையே உலுக்கியது.
ஆனால் ஒவ்வொரு படமும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் அபாய நிலைகளை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது'' என்றார்.
யுனிசெஃப் மேற்கொண்ட சர்வதேச ஆய்வின்படி, அகதிகளாக வெளியேறிய 10 மில்லியன் குழந்தைகளோடு, 28 மில்லியன் குழந்தைகள் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களால் புலம்பெயர்ந்துள்ளனர்.
இவர்களில் அகதிகள் அங்கீகாரம்கூட கிடைக்காமல் இன்னமும் 1 மில்லியன் குழந்தைகள் புகலிடம் தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர்.
சுமார் 17 மில்லியன் குழந்தைகள் தங்களின் சொந்த நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
சுமார் 20 மில்லியன் குழந்தைகள் குழு வன்முறை, அதீத வறுமை ஆகியவற்றால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் எந்த வித ஆவணங்களும், பொருளாதார நிலையும் இல்லாததால் எப்போதும் வன்முறைக்கு உள்ளாகும் அபாயத்திலேயே இருக்கின்றனர். அவர்களைக் கண்காணிக்கவும், பாதுகாக்கவும் எந்த முறையான வசதியும் செய்யப்படவில்லை.
இதைத்தவிர சொந்த முயற்சியில் நாட்டைக் கடக்க எண்ணும் சிறார்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் சுமார் 78 நாடுகளில் தஞ்சமடைய விண்ணப்பித்துள்ளனர். இது 2014-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம்.
உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள். ஆனால் அதில் பாதிபேர் அகதிகளாகவே இருக்கின்றனர். 2015-ல் ஐ.நா.வின் கீழ் இருக்கும் குழந்தை அகதிகளில் சுமார் 45% பேர், சிரியா மற்றும் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள்.
இந்நிலை குறித்து அதிகாரிகளிடம் பேசிய ஐ.நா., புலம்பெயரும் சிறார்களையும், அகதி அந்தஸ்து வேண்டி நிற்பவர்களையும், குடும்பங்களில் இருந்து பிரிந்தவர்களையும் கண்காணிக்க வேண்டும்.
குழந்தை அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும். வெளிநாட்டவர் மீது எதிர்ப்பு தெரிவிக்காமல், பாகுபாடு காட்டாமல் பணிபுரியவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT