Last Updated : 20 May, 2017 04:25 PM

 

Published : 20 May 2017 04:25 PM
Last Updated : 20 May 2017 04:25 PM

என்னால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிட்டிருக்கலாம் ஆனால் இது குற்றமே செய்யாமல் 7 ஆண்டுகள் கைதியாக வாழ்ந்ததை என் நினைவிலிருந்து அழித்து விட முடியாது என்று விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இனிமேல்தான் தன்னுடைய எதிரகாலம் குறித்த ‘முறையான போர்’ தொடங்கவுள்ளது என்றார் அசாஞ்சே.

ஸ்வீடன் விசாரணையைக் கைவிட்ட செய்திக்குப் பிறகு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரக பால்கனிக்கு வந்து மகிழ்ச்சி தெரிவித்த அசாஞ்சே இன்னும் விவகாரம் முழுதும் முடிந்து விடவில்லை என்றார்.

ஆனால் தூதரகத்தை விட்டு தான் வெளியே வருவது பற்றி அசாஞ்சே ஒன்றும் கூறவில்லை. ஆனால் இவர் கட்டிடத்தை விட்டு கீழே இறங்கினால் பிரிட்டன் அதிகாரிகள் அசாஞ்சேயை கைது செய்ய காத்திருக்கின்றனர் என்பதே உண்மை நிலவரம். விக்கிலீக்ஸ் ஒரு பகைமையான உளவு நிறுவனம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

“இந்த நாள் ஒரு முக்கியமான வெற்றிதான். ஆனால் இது குற்றமே செய்யாமல் 7 ஆண்டுகள் கைதிபோல் வாழ்ந்ததை, வாழ்வதை அழித்து விடுமா? சிறையில், வீட்டுக்காவலில் இப்போது சூரிய வெளிச்சம் படாத தூதரகத்தில் 5 ஆண்டுகள், இவற்றையெல்லாம் நான் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது” என்றார் அசாஞ்சே.

அமெரிக்கா இவரை சிறையில் தள்ள காத்திருக்கிறது, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ், ஏப்ரல் 2017-ல், “சிலபேர்களை சிறையில் அடைக்க வேண்டியுள்ளது” என்றார்.

இந்நிலையில் அசாஞ்சே மேலும் கூறும்போது, “இந்த விவகாரம் முடிந்து விட்டது என்று கூறுவதற்கில்லை, இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். இப்போதுதான் முறையான போர் தொடங்கியுள்ளது” என்றார்.

ஜூலியன் அசாஞ்சேயின் தாய் கிறிஸ்டின் அசாஞ்சே ஆஸ்திரேலிய வானொலியில் கூறிய போது, “அசாஞ்சேயின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. எனவே ஆஸ்திரேலிய அரசு அவருக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கினால்தான் அவர் ஈக்வடாரில் தஞ்சமடைய முடியும்.

தற்போது குற்றச்சாட்டில்லாத நிலையில், கைது வாரண்டும் காலாவதியான நிலையில் அவரை தொடர்ந்து தூதரகத்தில் பிரிட்டன் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்பதோடு கிரிமினல் வேலையாகும்” என்றார் கடுமையாக.

இதற்கிடையே ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தியவர் விசாரணை கைவிடப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்து என்ன?

பிரிட்டனில் சிறையா? ஈக்வடாரில் தஞ்சமா? அமெரிக்காவுக்கு நாடுகடத்தலா? இன்னும் 5 ஆண்டுகள் ஈக்வடார் லண்டன் தூதரகத்தில் வாசமா? என்று அசாஞ்சேயின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x