Published : 27 Oct 2013 04:12 PM
Last Updated : 27 Oct 2013 04:12 PM

மும்பை தாக்குதல் விசாரணை தாமதம் ஏன்?- பாகிஸ்தான் அரசு மழுப்பல்

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா சென்று வந்த நீதிக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தொடரும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

2008 மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்துக்காக தள்ளி வைக்கப்பட்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில், விசாரணையை ஏன் இன்னும் தொடங்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அண்மையில் கேள்வி எழுப்பியது அந்த நாட்டுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அந்த நாட்டின் வெளியறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஆசிஸ் செளத்ரி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த விளக்கத்தில், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா சென்று விசாரணை நடத்திய நீதிக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணை தொடரும் என்றார்.

சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசிஸ், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியாவிடம் இருந்து மேலும் ஆதாரங்களை கோரியுள்ளோம் என்று தெரிவித்தார். இதுகுறித்து பி.டி.ஐ. நிருபர் கேட்டபோது, என்னிடம் அதற்கான விவரங்கள் இல்லை என்று ஆசிஸ் மழுப்பலாகப் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, பொதுவான எதிரியான பயங்கரவாதத்தை இருநாடுகளும் இணைந்து தோற்கடிக்க வேண்டும் என்றார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது, மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவரை ஒப்படைக்கும்படி இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். இந்த விவகாரம் குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இதற்கு பாகிஸ்தான் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஸ், டான் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மும்பை தாக்குதல் வழக்கில் ஹபீஸ் சையத்துக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா பதில் பதிலளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் சனிக்கிழமை கூறியது: மும்பை தாக்குதல் சம்பவ சதித் திட்டம் முழுவதும் பாகிஸ்தானில்தான் தீட்டப்பட்டது. அங்குதான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. 99 சதவீத ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் உள்ளது. அண்மையில் இந்தியா வந்த பாகிஸ்தான் நீதிக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. அந்தக் குழு கேட்ட அனைத்து ஆதாரம், ஆவணங்களையும் அளித்துவிட்டோம். இனிமேலும் ஆதாரம் வேண்டும் என்று பாகிஸ்தான் கோருவது வேடிக்கையாக உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x