Published : 01 Jan 2014 01:12 PM
Last Updated : 01 Jan 2014 01:12 PM
ரஷியாவின் வால்காகிராட் நகரில் ஞாயிற்றுக்கிழமையும் திங்கள்கிழமையும் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 33 ஆக உயர்ந்தது. டிசம்பர் 29 ம் தேதி ரயில் நிலையத்தில் நிகழ்ந்த மனித குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்து வால்காகிராட் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் திங்கள்கிழமை இரவு இறந்தார்.
இவரைச் சேர்த்து டிசம்பர் 29ம்தேதி குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக நெருக்கடி கால அமைச்சரகத்தின் செய்தித்தொடர்பாளர் டிமித்ரி உலனாவ் செவ்வாய்க்கிழமை இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
திங்கள்கிழமை டிராலி பஸ்ஸில் நடந்த மனித குண்டு வெடிப்பில் மோசமாக காயம் அடைந்திருந்த ஒருவரும் உயிரிழந்ததால் இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ரயில் நிலைய மனித குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பெண் தற்கொலைப்படை தீவிரவாதி காரணம் என தெரியவந்துள்ளது. இதனிடையே, நாடு முழுவதிலும் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் விளாதிமிர் புதின் உத்தர விட்டுள்ளார்.
பிப்ரவரி 7 ம் தேதி ஆரம்பிக்கவுள்ள சொச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டி பத்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகத்தை இந்த இரு தாக்குதல் சம்பவங் களும் எழுப்பியுள்ளன. வடக்கு காகசஸ் பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவிக்க வலியுறுத்தி வரும் தீவிரவாத அமைப்பின் தலைவர் டோகு உமாராவ், இந்த பிராந்தியத்தில் பொதுமக்கள் மீது தாக்குததல் நடத்துவதுடன் ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்கும்படி தமது இயக்கத்தினருக்கு உத்தர விட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT