Published : 02 Feb 2014 12:00 AM
Last Updated : 02 Feb 2014 12:00 AM
சர்வதேச அளவில் முன்னணி பொருளாதாரப் பத்திரிகையான “தி எகனாமிஸ்ட்” இப்புத்தாண்டில் இந்தியாவைப் பாராட்டி ஒரு மகுடம் சூட்டியுள்ளது.
சர்வதேச அளவில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விலை அதிகரிப்பது குறைவாக உள்ளது என்பதுதான் அது.
மேற்கத்திய பாணி பொருளாதார புள்ளி விவரங்களும், ஆய்வு அறிக்கைகளும் எப்போதும் எழை, எளியவர்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பும் வகையிலேயே இருக்கும் என்பதற்கு இது மேலும் ஓர் உதாரணம்.
பொருளாதாரப் பாடத்தில் பொருள் வாங்கும் திறன் சமநிலை (பர்சேஸிங் பவர் பேரிட்டி) என்று ஒரு கோட்பாடு உண்டு. ஒரே பொருளை இரு நாடுகளில் வாங்கும்போது கொடுக்க வேண்டிய பணத்தை நாணய மாற்று விகிதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது இக்கோட்பாடு. புரியும்படி எளிதாகச் சொல்வதென்றால் ஒரே பொருளுக்கு நம் நாட்டிலும், பிறநாடுகளிலும் உள்ள விலை வேறுபாட்டின் மூலம் விலைவாசியை ஆய்வு செய்வது என்று கூறலாம்.
இந்த ஆய்வுக்கு தி எகனாமிஸ்ட் கையில் எடுத்துள்ளது உலகம் முழுவதற்கும் பொது உணவாகிப் போன “பர்கர்”. அதுவும் அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்ட “மெக்டோனல்ஸ்” ரெஸ்டாரெண்டில் விற்கப்படும் “பிக் மேக் பர்கர்” .
பர்கர் என்பதும் வெறும் சாப் பாட்டுப் பொருள் மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்தை உணர்த்தும் உன்னதப் பண்டம் என்று கூறுகிறது தி எகனாமிஸ்ட். “பிக் மேக் இன்டக்ஸ்” என்ற பெயரி லான இந்த ஆய்வு உலகில் எங்கு “மெக்டோனல்ஸ்” பர்கர் மலிவான விலைக்குக் கிடைக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்த நாடு இந்தியா.
சிக்கன் அல்லது மட்டனை உள்ளே திணித்து விற்கப்படும் இந்த பிக் மேக் பர்கருக்கு இந்தியாவில் “மகாராஜா மேக்” என்று லேபிள் ஒட்டி விற்பனை செய்கிறது “மெக்டோனல்ஸ்”.
அரிய பெருமைக்குரிய உணவான பர்கர் குறைவான விலைக்கு விற்கப்படுகிறது என்றால் அங்கு அனைத்துப் பொருள்களுமே விலை குறைவாகத்தானே இருக்க வேண்டும்…! என்று முடிவுக்கு வருகிறது இந்த ஆய்வு.
இந்தியாவில் “மெக்டோனல்ஸ்” பர்கர் ஒன்றின் சராசரி விலை சுமார் ரூ.93. உலகிலேயே பர்கர் விலை குறைவாகக் இருக்கும் இடமும் இதுதான்.
அடுத்த இடத்தில் இருப்பது தென்ஆப்பிரிக்கா. அங்கு பர்கரின் விலை ரூ. 125. இதற்கு அடுத்த இடங்களில் மலேசியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. பர்கர் அடிப்படையிலான விலை வாசி கணக்கெடுப்பில் உலகிலேயே நார்வேயில்தான் விலைவாசி மிகவும் அதிகம். அங்கு ஒரு பர்கரின் விலை சுமார் ரூ.450.
இனிமேல் இந்தியாவில் அரிசி விலை உயர்ந்து விட்டது, பால் விலை அதிகரித்து விட்டது என்று யாராவது பேசினால், உலகிலேயே மிகக் குறைவான விலையில் பர்கர் கிடைப்பது நம்நாட்டில்தான் அதை வாங்கிச் சாப்பிடுங்கள் என்று அரசியல்வாதிகள் முழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
பொருள்களின் தரத்தைப் பார்த்து வாங்காமல், அவற்றுக்கான விளம்பரத்தைப் பார்த்து வாங்கும் மக்களின் எண்ணிக்கையே இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பர்கரை இந்தியாவில் மேலும் பிரபலப்படுத்தும் வியாபார யுக்தியாகவும் இந்த ஆய்வு கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT