Last Updated : 28 Jan, 2017 01:59 PM

 

Published : 28 Jan 2017 01:59 PM
Last Updated : 28 Jan 2017 01:59 PM

ட்ரம்ப்பின் உத்தரவு அகதிகளுக்கான கதவை அடைக்கும்: மலாலா வேதனை

சிரிய அகதிகள் அமெரிக்கா வர ட்ரம்ப் தடை விதித்திருப்பது, தன்னை மனமுடைய செய்துள்ளதாக பாகிஸ்தான் சமூக ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசப் வேதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அகதிகளுக்கான குடியுரிமைக் கொள்கையில் பல்வேறு அதிரடி மாற்றங்களைப் புகுத்திய அதிபர் ட்ரம்ப் அதற்கான செயலாக்க உத்தரவை வெள்ளிக்கிழமையன்று பிறப்பித்தார்.

ட்ரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, சிரிய அகதிகளுக்கு விசா வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படுகிறது. ட்ரம்ப்பிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை சிரியர்களுக்கு அமெரிக்க விசா கிடையாது. தற்போது, பரிசீலனையில் இருக்கும் விசா படிவங்கள்கூட கருத்தில் கொள்ளப்படாது.

மேலும், பார்டர் ரெஃப்யூஜி புரோகிராம் எனப்படும் எல்லையில் காத்திருக்கும் அகதிகள் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறுவதற்கான திட்டத்தை 4 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

இது முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் ட்ரம்ப் நிகழ்த்தும் கெடுபிடி என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ட்ரம்பின் இந்த முடிவு குறித்து மலாலா கூறும்போது, "போரினால் பாதிக்கப்பட்ட சிரிய குழந்தைகளுக்கான கதவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடைத்திருப்பது என்னை மனமுடைய செய்துள்ளது. சுமார் ஆறு வருடங்களாக அந்த குழந்தைகள் சிரியாவில் நடக்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள்.

உலகம் முழுவதும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. குடிபெயர்ந்த மக்கள்தான் உங்கள் நாடு உருவாக பாடுபட்டார்கள். தங்களது கடின உழைப்பின் மூலம் தங்களுக்குக்கான புதிய வாழ்க்கையை அமைந்து கொண்டார்கள்.

அமெரிக்கா அகதிகளையும், புலம்பெயர்ந்தவர்களையும் அரவணைக்கும் நாடு என்ற வரலாற்று சிறப்புமிக்க இடத்திலிருந்து பின் நோக்கி சென்று விட்டது" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x