Published : 25 Oct 2013 10:48 AM
Last Updated : 25 Oct 2013 10:48 AM

செல்போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் - அமெரிக்காவுக்கு ஜெர்மனி அரசு எச்சரிக்கை

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போன் உரையாடல்களை அமெரிக்கா ஒட்டுகேட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ள ஜெர்மனி அரசு, இந்த விவகாரம் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்கும்படி சம்மனும் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் உளவுப் பிரி வான தேசிய புலனாய்வு அமைப்பு (என்.எஸ்.ஏ.) இணையதளம் மூல மாக உலக நாடுகளை உளவு பார்த்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நட்பு நாடுகளை யும் அமெரிக்கா வேவு பார்த்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரான்ஸில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்பட சுமார் 70 லட்சம் பேரின் தொலைபேசி உரையாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டுக்கேட்டதாக சில நாள்களுக்கு முன்பு நாளிதழ்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் செல்போன் உரையாடல்களை என்.எஸ்.ஏ. பல ஆண்டுகளாக ஒட்டுக் கேட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதி செய்துள்ள ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்த விவகாரம் குறித்து தகவல்தொழில்நுட்ப நிபுணர்களும், உளவுத் துறையினரும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தது.

ஒபாமாவிடம் பேசிய மெர்கல்

இந்த விவகாரம் குறித்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், அமெரிக்க அதிபர் ஒபாமாவை புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜெர்மனி அரசு வெளியிட்ட அறிக்கையில், ஒட்டுக்கேட்கப்பட்டது உண்மை என்று உறுதி செய்யப்பட்டால் இது மிக மோசமான நம்பிக்கை துரோகம், இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும் படி ஜெர்மனிக்கான அமெரிக்க தூதர் ஜான் பி.எமர்சனுக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏஞ்சலா மெர்கலின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட வில்லை, இதுபோன்ற நடவடிக்கையில் அமெரிக்கா ஒருபோதும் ஈடுபடாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x