Published : 11 Nov 2013 12:00 AM
Last Updated : 11 Nov 2013 12:00 AM
நமக்கு மலாலாவைத் தெரியும். ஆனால் மலாலாவைச் சுடச் சொல்லி உத்தரவிட்ட முல்லா ஃபஸ்லுல்லாவைத் தெரியாது. தாலிபன்கள் அந்தப் பெண்ணைச் சுட்டார்கள் என்று பொதுவாகச் சொல்லிவிடுவார்கள். அன்று குண்டடிக்கு முன்பும் சரி, இன்று புத்தகத்துக்குப் பின்னும் சரி. மலாலாமேல் தீராத கொலைவெறி வளர்த்துக்கொண்டிருக்கும் இந்த முல்லா ஃபஸ்லுல்லாதான் இன்றைக்கு பாகிஸ்தானிய தாலிபன் அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
நவம்பர் 1ம் தேதி அமெரிக்கத் தாக்குதலுக்கு பலியான பாகிஸ்தானிய தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா மெஸூத் மறைவை அடுத்து இந்தப் பதவியேற்பு நிகழ்ந்திருக்கிறது.
1974ம் ஆண்டு ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஃபஸ்லுல்லா, மிக இளம் வயதிலேயே சூஃபி முஹம்மது என்னும் ஒரு தீவிரவாத இயக்கத் தலைவரின் சிஷ்யப் பிள்ளையாகச் சேர்ந்து தொழில் கற்றவர். குருவின் பெண்ணையே பிறகு கல்யாணமும் செய்துகொண்டவர். அந்தப் பெண்ணை நமது முல்லா கடத்திப் போய்த்தான் கல்யாணம் செய்துகொண்டார் என்றொரு வதந்தி உண்டு.
அது இப்போது முக்கியமில்லை. மேற்படி முல்லாவானவர், ஹக்கிமுல்லா மெஸூதின் படுகொலைச் சம்பவத்துக்குப் பிறகு அமைதிப் பேச்சுக்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருப்பது முக்கியம். பாதுகாப்புப் படைகள், அரசு ஊழியர்கள், அரசு அலுவலகங்கள், அரசியல் தலைவர்கள், போலீசார். அத்தனை பேருக்கும் பிடித்தது சனி. பொது மக்களுக்குப் பிரச்னை கொடுக்க மாட்டோம். எனவே மகாஜனங்கள் பயப்படவேண்டாம்.
இது அவரது நேற்றைய அறிவிப்பு. எளிதில் புறக்கணிக்கக்கூடிய அறிவிப்பல்ல இது. முல்லா கொஞ்சம் பயங்கரமான ஆசாமி. இவருக்கு ரேடியோ முல்லா என்றொரு பெயர் உண்டு. முன்னொரு காலத்தில் (என்றால் 2006) ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் இவர் ஒரு ரேடியோ சர்வீஸ் நடத்திக்கொண்டிருந்தார். எப்படியாவது அந்த சிற்றலை ரேடியோவை நிறுத்திவிட வேண்டுமென்று பாகிஸ்தான் அரசு தலையால் தண்ணி குடித்துப் பார்த்து முடியாமல் போனது. படிப்பறிவில்லாத பழங்குடி மக்களிடையே பாகிஸ்தான் அரசின் இஸ்லாம் விரோத நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லி, அவர்களை முற்றிலும் தாலிபன் ஆதரவாளர்களாக மாற்றியதில் முல்லாவுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
2007 நவம்பரில் நடைபெற்ற தாக்குதலில் முல்லாவின் கோட்டை தகர்க்கப்பட, அவர் ஆப்கனில் உள்ள குனார் பகுதிக்குத் தப்பிச் சென்று, விட்ட பணியை அங்கிருந்து செய்ய ஆரம்பித்தார். ஆப்கனிஸ்தானில் தாலிபன்கள் கொண்டு வந்த கடும் அடிப்படைவாதச் சட்டதிட்டங்களை ஸ்வாட் பள்ளத்தாக்கில் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிராந்தியங்களில் அறிமுகப்படுத்தி ஜனங்களைத் திக்குமுக்காட வைத்தவர் இந்த முல்லா. மலாலா மாட்டிக்கொண்டது எல்லாம் அந்த விவகாரத்தின் தொடர்ச்சிதான்.
நிற்க. மேற்படி முல்லாவின் தற்போதைய அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்குப் பெரிய தலைவலியாகியிருக்கிறது. ஹக்கிமுல்லா மெஸூதின் படுகொலை வெகு நிச்சயமாகப் பிரச்னையாகும் என்பது ஷெரீஃபுக்குத் தெரியும். அதனால்தான் ஊருக்கு முன்னால் அமெரிக்கப் படைகளுக்குக் கண்டனமெல்லாம் சொல்லி காறித் துப்பினார். ஆனாலும் ஃபஸ்லுல்லா அவரை மன்னிக்கத் தயாராயில்லை. அரசாங்கமா நடக்கிறது பாகிஸ்தானில்? அமெரிக்காவின் அடிமைகள், எச்சில் பொறுக்கிகள் என்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எங்களால் சகித்துக்கொள்ள முடியாது; இரண்டிலொன்று பார்க்காமல் விடமாட்டோம் என்று சொல்லிவிட்டார்.
எனவே தாலிபன்களுடன் அமைதிப் பேச்சு என்னும் அத்தியாயம் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
இம்முறை நவாஸ் ஷெரீஃபின் சொந்த மாகாணமான பஞ்சாப்பில் தாலிபன்களின் தாக்குதல் தொடங்கும் என்று தெரிகிறது. ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாலிபன்கள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை சொல்லியிருக்கிறது. பாகிஸ்தானிய ராணுவத் தளங்கள் பெரும்பாலும் இப்போது அமெரிக்கப் படைகளின் மறைமுகக் கட்டுப்பாட்டில் இருக்கிற சூழ்நிலையில் சர்வ நிச்சயமாக அமெரிக்கத் தலையீடு இதில் இருந்தே தீரும். இது பிரச்னையின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தத்தான் செய்யுமே தவிர குறைக்க உதவாது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் ஆப்கனிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் தாலிபன்கள் தமது பலத்தை இரு தேசங்களுக்குமே சேர்த்துப் புரியவைப்பதற்கு இத்தாக்குதல்களைப் பயன்படுத்துவார்கள்.
நவாஸ் ஷெரீஃப் பாவம்தான். புலிவாலைப் பிடித்தால்கூடத் தப்பிக்கலாம். சனி வாலையல்லவா பிடித்திருக்கிறார்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT