Last Updated : 13 Jan, 2014 10:58 AM

 

Published : 13 Jan 2014 10:58 AM
Last Updated : 13 Jan 2014 10:58 AM

ஏரியல் ஷரோன் - சில நினைவுகள்

அரசியல் தலைவர்களுக்குத் தொண்டர்கள் இருப்பது சாதாரணம். ரசிகர்கள் மிக்க தலைவர்கள் அரிது. நம்மூரில் எம்.ஜி.ஆருக்குத் தொண்டர்கள் அதிகமா? ரசிகர்கள் அதிகமா?

ஆனால் ஏரியல் ஷரோன் சினிமாவில் இருந்து வந்தவரல்லர். அவர் மிலிட்டரிக்காரர். 1948ம் வருஷம் இஸ்ரேல் என்ற தேசம் உதயமானது முதல் இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்றியவர். 1974ம் வருடம் ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்று அரசியலுக்குள் நுழைந்து 81ம் வருடம் ராணுவ அமைச்சரானபோதே அவருக்கு இந்த ரசிகர் படை உண்டு. அவர் பிரதமராகிப் புகழ்பெறவில்லை. புகழோடு அந்தப் பதவிக்கு வந்தவர்.

கடந்த எட்டாண்டுக் காலமாக உடல் நலக் குறைவுடன் இருந்த ஏரியல் ஷரோன் கடந்த சனிக்கிழமை காலமானபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒருத்தர் விடாமல் கண்ணீர் சிந்தினார்கள். அத்தனை பேரும் எண்ணிப் பார்த்தது ஒரே ஒரு விஷயத்தைத்தான்.

பாலஸ்தீனியர்களின் நிலமாக உள்ள காஸாவிலும் மேற்குக் கரைப் பகுதியிலும் ஏராளமான இஸ்ரேலியக் குடியிருப்புகளை வலுக்கட்டாயமாக நிறுவி பாலஸ்தீனியர்களின் வயிற்றெரிச்சலையும் இஸ்ரேலியர்களின் பாராட்டையும் ஒருங்கே பெற்ற ஷரோன், தான் நிறுவிய குடியிருப்புகளில் இருந்து தானே தனது யூத இனத்தவரைத் திரும்பப் பெற்ற சம்பவம் அவர்களால் மன்னிக்க முடியாததாக இருந்தது.

இதே ஷரோன்தான் 1982ல் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது (லெபனான் யுத்த காலத்தில்) பி.எல்.ஓவின் துருப்புகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஷப்ரா, ஷாடிலா என்னும் இரு பாலஸ்தீனிய அகதி முகாம்களுக்குக் கூலிப் படைகளை அனுப்பி அங்கிருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை மொத்தமாகக் கொன்று குவிக்கவும் காரணமாக இருந்தார்.

யூதரல்லாத மனித குலத்தவர் அத்தனை பேரும் கடும் கண்டனம் தெரிவித்த இந்தச் சம்பவம்தான் யூதர்களிடையே ஷரோனின் புகழை உச்சாணிக் கொம்புக்கு எடுத்துச் சென்றது.

இஸ்ரேலின் பாதுகாப்பு என்பதைத் தனது தாரக மந்திரமாக வாழ்நாள் முழுதும் சொல்லி வந்தவர் ஏரியல் ஷரோன். அவரது அனைத்து நடவடிக்கைகளுமே அதைச் சார்ந்த செயல்பாடுகளாகவே இருந்து வந்திருக்கின்றன. காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுகிறேன் என்று ஒரு சமயம் ஷரோன் அறிவித்தார். பிரச்னையின் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவும் அமைதியிலும் இஸ்ரேலுக்கு நாட்டமிருக்கிறது என்று உலகுக்குக் காட்டுகிற விதமாகவும் இது பார்க்கப்பட்டது.

உண்மையில் ஷாரோன் படைகளைத் திரும்பப் பெற்றதன் ஒரே காரணம், காஸாவில் இருந்த இஸ்ரேலிய வீரர்களுக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை என்பதுதான். வெறும் பாலைப் பகுதி. சுக சௌகரியங்கள் எதுவும் கிடையாது. தண்டத்துக்குப் போய் உட்கார்ந்துகொண்டு அவஸ்தைதான் பட்டுக்கொண்டிருந்தார்கள். தவிரவும் காஸாவில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதன்மூலம், மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியிருப்புகளை இன்னும் அதிகப்படுத்தி, இன்னும் பாதுகாப்பை பலப்படுத்தி வைக்கலாமே என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.

யாசிர் அரஃபாத்துடன் கைகுலுக்க மாட்டேன் என்று திரும்பிக் கொண்டது, பிரச்னைக்குரிய அல் அஸ்கா மசூதிக்கு அதிரடி விசிட் அடித்தது என்று ஷாரோனை நினைவுக்கூரப் பலதும் இருக்கின்றன. ஷாரோன் ஓர் அப்பழுக்கற்ற தேசபக்தர் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் பாலஸ்தீனியர்களின் வயிற்றெரிச்சலை மொத்தமாகக் கொட்டிக்கொண்டார். அதனாலேயேதான் இந்த உலகத் தலைவரின் மரணம் யூத குலத்துக்குப் பேரிழப்பாக இருக்கிறது. ஆனால், யூத குலத்துக்கு மட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x