Published : 25 Jan 2014 12:05 PM
Last Updated : 25 Jan 2014 12:05 PM
அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல மாட்டேன் என்று என்.எஸ்.ஏ. முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித் துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.எஸ்.ஏ.), இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை வேவுபார்த்த விவகாரத்தை அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென் கடந்த ஆண்டு ஜூனில் அம்பலப்படுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை அவ்வப்போது ஆதாரங்களுடன் அவர் வெளியிடும் ரகசிய தகவல்களால் அமெரிக்கா அடிக்கடி ஆட்டம் காண்கிறது.
தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள ஸ்னோடென்னுக்கு ஆதரவாக “பிரீ ஸ்னோடென்” என்ற பெயரில் தனி இணையதளம் செயல்பட்டு வருகிறது. அந்த இணையதள வாசகர்களின் கேள்வி களுக்கு ஸ்னோடென் வியாழக்கிழமை நேரடியாகப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது தாய்நாடான அமெரிக்காவுக்குச் திரும்பிச் செல்ல ஆசைதான். ஆனால், அங்கு என் மீது நேர்மையாக விசாரணை நடத்தப்படாது. எனவே நான் ஒருபோதும் அமெரிக்காவுக்குச் திரும்பிச் செல்ல மாட்டேன். ஊழல்கள், தவறு களை சுட்டிக்காட்டு பவர்களுக்கு அமெரிக்க சட்ட விதிகளில் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அந்த விதிகளில் மாற்றம் செய்யப் பட வேண்டும். ஆனால் அது இப்போதைக்கு நடக்காது.
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் கோடிக்கணக்கான தொலை பேசி உரையாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டுக் கேட்டது. இவை உள்பட பல்வேறு முறைகேடுகளில் என்.எஸ்.ஏ. ஈடுபட்டது என்று ஸ்னோடென் குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT