Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM
வங்கதேசத்தில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து விட்டதால், ஆளும் கட்சியான அவாமி லீக் கூட்டணியைச் சேர்ந்த 151 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தேர்தல் ஜனவரி 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதிக்கும் மேற்பட்ட வேட்பா ளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டால், மீண்டும் எந்தவித சிரமுமின்றி அவாமி லீக் ஆட்சியைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செய்தித்தொடர்பா ளர் கூறுகையில், “மொத்தமுள்ள 300 தொகுதிகளில் இப்போதைக்கு 151 இடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் உள்ளன. தேர்தல் அதிகாரிகளிட மிருந்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்பு உண்மை நிலவரம் தெரியவரும். போட்டியின்றி வேட்பா ளர்கள் தேர்வு செய்யப்படும் தொகுதிகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
தேர்தல் ஆணையர் அபு ஹஃபிஸ் கூறுகையில், “திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும். பல இடங்களில் வேட்பாளர்களின் எண்ணிக்கை போதிய அளவு இல்லாத போதிலும், சட்டச் சிக்கல் ஏதும் ஏற்படாது” என்றார்.
இந்த தேர்தலில் அவாமி லீக் கட்சியை சேர்ந்த 127 வேட்பா ளர்கள், ஜாதியா கட்சியை சேர்ந்த 18 வேட்பாளர்கள், ஜாதியா சமாஜ்தந்திரிக் தளம் கட்சியை சேர்ந்த 3 பேர், தொழிலாளர்கள் கட்சியை சேர்ந்த இருவர், ஜாதியா (மஞ்சு பிரிவு) கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த கட்சிகள் அனைத்தும், அவாமி லீக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
புறக்கணிப்பு ஏன்?
இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக வங்கதேச தேசிய வாதக் கட்சி தெரிவித்த யோச னையை ஆளும் அவாமி லீக் கட்சி ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த தேர்தலை வங்கதேச தேசியவாதக் கட்சி புறக்கணித்து விட்டது. அனைத்து கட்சிகளின் பிரதி நிதிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று அவாமி லீக் வலியுறுத்தியது. ஆனால், அரசியல் கட்சிகளை சாராதவர்களை உள்ளடக்கிய இடைக்கால அரசின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்று வங்கதேச தேசியவாதக் கட்சி வலியுறுத்தியது.
அவாமி லீக் கட்சிக்கும், வங்கதேச தேசியவாத கட்சிக்கும் இடையே சமரசம் செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று வங்கதேச தேசியவாதக் கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் முஷாரப் ஹுசைன், அவாமி லீக் இணைப் பொதுச்செயலாளர் மகபூப் ஆலம் ஹனிப் ஆகியோர் தெரிவித்துள் ளனர்.
ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில், தேர்தலை ரத்து செய்வதோ, வங்கதேச தேசியவாத கட்சி சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிப்பதோ சாத்தியமில்லை என்றே தெரிகிறது. அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.
“வேட்புமனுவை தாக்கல் செய்யும் காலம் முடிவடைந்து விட்டதால் வங்கதேச தேசியவாத கட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துவிட்டது” என்று அவாமி லீக் கட்சித் தலைவரும், பிரதமருமான ஷேக் ஹசீனா ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT