Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM
ஆளில்லா விமானத் தாக்குதல்களால் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் முற்றி வருவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம், தலிபான்களுக்கு எதிராக ஆளில்லா விமானத் தாக்குதல்களை அடிக்கடி நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் அதிகமாக பலியாவதாக ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆளில்லாத விமானத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு அதிபர் ஹமீது கர்சாயிடம் அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.இதன்காரணமாக அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது.
2014-ம் ஆண்டில் அமெரிக்க கூட்டுப் படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 15,000 அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பது தொடர்பான பாதுகாப்பு ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானத் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவம் அடிக்கடி அத்துமீறுவதை சுட்டிக் காட்டி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதிபர் ஹமீது கர்சாய் மறுத்து வருகிறார் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உறவிலும் விரிசல்
இதேபோல் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளிலும் அமெரிக்க ராணுவம் அவ்வப்போது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கு பாகிஸ்தான் அரசும் அந்த நாட்டு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றது, கடந்த நவம்பர் 1-ம் தேதி பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹகிமுல்லா மசூத் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டது ஆகிய விவகாரங்களால் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT