Published : 25 Oct 2014 11:46 AM
Last Updated : 25 Oct 2014 11:46 AM
இந்தியா மிகப்பெரும் சக்தி கொண்ட நாடு என தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி புகழாரம் சூட்டினார்.
அமெரிக்க வெளியுறவுத் துறைசார்பில் அதன் தலைமையகத்தில் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி பேசியதாவது:
உலகிலுள்ள மற்றவர்களை விட இங்கு கூடியிருப்பவர்களுக்கு நன்கு தெரியும், இந்தியா மிகப்பெரும் சக்தி கொண்ட நாடு என்பது. தெற்காசியாவில் உள்ள மிகப்பெரும் நாடான இந்தியாவுக்கு அண்மையில் சென்றிருந்தேன். அதேபோன்று மோடியின் அமெரிக்க வருகையின் போதும் நாங்கள் இருவரும் ஏற்கெனவே வலுவாக உள்ள இந்திய-அமெரிக்க உறவை மேலும் உறுதிப்படுத்தியது மறக்க முடியாத ஒன்று. உலகின் பழமையான ஜனநாயக நாடும், மிகப்பெரும் ஜனநாயக நாடும் தங்கள் உறவால் அளவற்ற சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டுள்ளன.வரலாறு நம்மைச் செம்மைப்படுத்தாது, ஆனால், செம்மையான வரலாற்றைப் படைக்கும் சக்தி நமக்கு உண்டுஎன்பதில் இருநாடுகளுமே நம்பிக்கை கொண்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.
வெளியுறவுத் துறை அலுவலகத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெஞ்சமின் பிராங்க்ளின் அறையில் இந்நிகழ்ச்சி நடந்தது. இந்த அறை மெழுகுவர்த்திகளாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள், தெற்காசிய நாடுகளின் தூதர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT